Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை அரசு பொருளாதார உடன்படிக்கையில் கைச்சாத்திடத்தயங்குவது குறித்து புதுடில்லி ஏமாற்றம் !

இந்தியாவுடன் முழுமையான பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது குறித்து இலங்கை இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்காமலிருப்பது புதுடில்லிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு ஜூலை 9ஆம் திகதி விஜயம் மேற்கொண்ட இந்திய வர்த்தக செயலாளர் ஜீ.கே.பிள்ளை முழுமையான பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கை குறித்து பேச்சுகளை மேற்கொண்டிருந்தார். இந்தச் சந்திப்பின்போது வர்த்தகத்திற்கு மாத்திரமல்லாமல் சேவை மற்றும் முதலீட்டிற்கும் ஊக்குவிப்பை வழங்கக்கூடிய குறிப்பிட்ட உடன்படிக்கை “சார்க்’ மாநாட்டின்போது கைச்சாத்தாகுமென அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்திய வர்த்தக செயலாளரின் இக்கருத்திற்கு இலங்கை அரசு அவ்வேளை எதிர்ப்பு எதனையும் வெளியிடவில்லை.
எனினும்,தற்போது இலங்கை அரசு இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடத் தயங்குவதுபோல் தோன்றுகிறது.
இலங்கையின் சர்வதேச வர்த்தக அமைச்சின் செயலாளர் எஸ்.ரணுகே, குறிப்பிட்ட உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சில சலுகைகள் குறித்து இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லையெனக் குறிப்பிட்டுள்ளார். ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை இந்தியாவுடனான உடன்படிக்கைக்கு இறுதி அங்கீகாரம் வழங்கவில்லையெனத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசின் இத்தகைய நிலைப்பாடு குறித்து, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையுடன் இந்தியா பாதுகாப்பு உறவுகளை விஸ்தரிப்பது போன்றவற்றுக்கு இணங்கியுள்ள சூழ்நிலையில் கொழும்பு பொருளாதார உடன்படிக்கையில் கைச்சாத்திடத் தயங்குவது குறித்து புதுடில்லி ஏமாற்றமடைந்துள்ளமை கொழும்பிலுள்ள உயர்ஸ்தானிகராலயத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக ஆங்கில வார இதழொன்று குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version