பிரித்தானியாவில் கல்விபயல வரும் மாணவர்கள் மீதான ஒடுக்குமுறைச் சட்டங்களை டேவிட் கமரன் அரசு நிறைவேற்றிய போது வேற்று தேசங்களைச் சார்ந்த மக்களின் எதிர்ப்புக் குரல்கள் பரவலாக எழுந்தன. பிரித்தானியத் தமிழர் அமைப்புக்களின் துண்டறிக்கைகூட இதற்கு எதிராக வெளியிடப்படவில்லை. ஆளும் கட்சிகளின் ஆதரவாளர்களும் அவர்களோடு வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஐந்தாம் படைகளுமே தமிழர்களின் தலைமைகள் என்ற அவமானம் தமிழ்த் தேசிய இனத்தையே சாரும். இந்த அவமானத்திற்கு அவர்கள் புலி ஆதரவாளர்கள் என்ற முகமூடியை அணிந்துள்ளனர். மரணச் சடங்குகளும், உலகின் பிழைப்புவாதிகளை அழைத்து இவர்கள் நடத்தும் கூட்டங்களும், தன்னார்வ நிறுவனங்களும் இவர்களுக்கான பணத்தின் ஊற்று மூலம்.
இதன் மறுபக்கத்தில், நாம் வாழும் உலகின் பயங்கரவாதிகளில் மிகவும் முக்கியமானவரும், உலகின் கிரிமினல்கள் குறிப்பிடத்தக்கவருமான ராஜபக்சவுடன் விருந்துண்டு வியாபாரம் செய்யும் ஒரு குழு உருவாகியுள்ளது. முன்னை நாள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மகனும், தமிழர் விடுதலைக் கூட்டணி தனது ஆயுதக் குழுவினை இந்திய அரசுடன் இணைந்து தோற்றுவித்தபோது அதனை வழி நடத்தியவருமான பகிதரன் அமிர்த்தலிங்கம் கடந்தவாரம் ராஜபக்சவுடன் விருந்துண்ட அருவருப்பு வெளியானது. ராஜபக்சவின் அபிவிருத்தி என்ற அழிப்பை அவர் நியாயப்படுத்திய செய்திகளும் வெளியாகின.
இலங்கை அரசு சிறைச்சாலைக்குள் வைத்து கொலைசெய்த கோபிதாசின் அரசியல் கொலைக்கு இந்தப் பிழைப்புவாதிகள் அனைவரும் பொறுப்பேற்கவேண்டும்.
பிரித்தானிய அரசு கோபிதாஸ் கைது செய்து விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டதை அறிந்திருந்தது. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் இதுகுறித்துப் பேசியிருந்ததாகக் கூறுகிறார்.
தனது நாட்டின் சொந்தப் பிரஜையே பாதுகாக்கத் திரணியற்ற பிரித்தானிய அரசு போர்க்குற்றத்திற்காக ராஜபக்சவைத் தண்டிக்கப்போவதாக நாடகமாடி வருகிறது.
கோபிதாசின் மரணத்தை அடுத்து, அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் பிரிட்டனிலிருந்து இலங்கை சென்றுள்ளனர் .இந்நிலையில் அவரது சடலம் பொறுப்பேற்கப்பட்டு யாழ்ப்பாணம் எடுத்துசெல்லப்பட்டுள்ளது. அவரது மரணத்தினில் மர்மம் இருப்பதாகவும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் குடும்பத்தவர்கள் கோரியுள்ளனர்.