ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையினைக் கொண்டு இலங்கைத் தலைவர்களை கைது செய்ய முடியும் என சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஸ பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையினைத் தயாரித்தவர்கள் அதிகாரங்கள் இல்லாதவர்களாக இருக்கலாம். ஆனால் அறிக்கை மிகவும் சக்திவாய்ந்த தொன்றாக இருக்கின்றது.
இந்த அறிக்கையினைக் கொண்டு வெளிநாடுகளில் உள்ள மனித உரிமை அமைப்புக்கள், உள்ளூர் நீதிமன்றங்களின் உதவியுடன் பிடியாணை பிறப்பிக்க முடியும். அவ்வாறு பிடியாணை பிறப்பித்தால் இலங்கையின் அரசியல் தலைவர்கள், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் என்போர் வெளிநாடுகளுக்கு செல்லும்போது கைது செய்யப்படலாம். அதற்கான சக்தியினை நிபுணர் குழுவின் அறிக்கை கொண்டுள்ளது என்று விஜேதாச ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் எதிர்காலத்தில் இலங்கையின் அரசியல் தலைவர்கள், அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்வது சவாலானதொன்றாகவே காணப்படும் என்றும் பிபிசி சிங்கள சேவைக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.