Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை அரசுக்கு எதிரான போராட்டம் செத்துப் போன போராட்டமாம் -சொல்கிறார் நடிகர் சூர்யா.

தமிழக திரையுலகில் வாரிசு நடிகராக சினிமாவுக்கு வந்து குடும்பமாகவே திரயுலகில் செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. தகப்பனார் நடிகர் சிவக்குமார், தம்பி கார்த்தியும் நடிகர் என குடும்பமே ஒரு கலைக்குடும்பம். இவர் இந்தி நடிகர் விவேக் ஓபராயுடன் நடித்துள்ள படம் ரத்தச் சரித்திரா என்னும் பெயரில் தமிழகத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் எதிர்ப்பையும் மீறி இலங்கைப் பட விழாவில் கலந்து கொண்ட விவேக் ஓபராயின் படங்களுக்கு தென்னிந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவருடன் நடித்த சூர்யாவுக்கும் இதே சிக்கல்தான். ‘பெங்களூர் மிர்ரர்’ நாளிதழுக்கு சூர்யா அளித்துள்ள பேட்டி:
“தடையை மீறி கொழும்பில் நடந்த ஐஃபா விழாவில் பங்கேற்ற விவேக் ஓபராயுடன் நீங்கள் நடித்துள்ள ரத்த சரித்திரா படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதே?” “ஐஃபா விழா விவகாரமே செத்துப் போன ஒன்று. அதை இனியும் இங்கே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அது ஒரு சின்ன விஷயம். அதைப் போய் இன்னும் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறீர்களே… என்னுடைய ரத்த சரித்திரா வெளியீட்டை அந்த விழா தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகள் ஒன்றும் செய்து விடாது. சமீபத்தில் ராவணன் ரிலீஸானபோதுகூட யாரும் ஒன்றும் சொல்லவில்லையே (ராவணனுக்கு எதற்காக தடை விதிக்க வேண்டும்?).ரத்த சரித்திரம் படப்பிடிப்பின்போது நான் விவேக் ஓபராயோடு பேசினேன். அப்போது யுனிசெப் மற்றும் அந்நாட்டின் உள்ளூர் தமிழர்களுடன் இணைந்து புதிய பள்ளி ஒன்றை அமைத்திருப்பதாகச் சொன்னார். இந்த விஷயத்தில் அவர் என்ன உதவி கேட்டாலும் செய்ய நான் தயாராக உள்ளேன். அவருடன் சேர்ந்து அந்தப் பணியைச் செய்ய விரும்புகிறேன்.
நடிகர்கள் இலங்கை சென்றது வெறும் கேளிக்கைக்காக அல்ல. அங்குள்ள மக்களுக்கு உதவத்தான். இந்தப் பிரச்சினை அன்றோடு முடிந்துவிட்டது. திரும்பத் திரும்ப அதை கிளறுவது ஏன்?” என்று கேட்டுள்ளார் சூர்யா.

Exit mobile version