வவுனியா முகாம்களில் உள்ள மக்களை மீளக்குடியமர்த்துவதில் உறுதியான திட்டமொன்று இல்லையென்பதை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் வெளிக்காட்டி வருகின்றது.
முகாம்களில் உள்ள மக்கள் 180 நாட்களுக்குள் மீள் குடியமர்த்தப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, ரோஹித்த போகொல்லாகமவிடம் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, மக்களை
மீளக்குடியர்த்தும் பணிகளை துரிதப்படுத்துவதாகக் கூறியுள்ளார். எனினும், 180 நாட்களுக்கு அந்தப் பணிகள் நிறைவடையும் என உறுதிவழங்க மறுத்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த 180 நாட்கள் என்ற அந்த காலப்பகுதி, எப்போது முதல் ஆரம்பிக்கின்றது என்ற தகவலை இலங்கை அரசாங்கம் இதுவரை உறுதியாக தெரிவிக்கவில்லை.
உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடந்த மே மாதம் 19ம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~, முகாம்களில் உள்ள மக்கள் 180 நாட்களுக்குள் மீளக்குடியமர்த்தப்படுவர் எனக் கூறியிருந்தார்.
இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டு இன்றைக்கு 67 நாட்கள் கடந்துள்ள நிலையிலும், முகாம்களிலுள்ள மக்கள் எப்போது முழுமையாக மீளக்குடியமர்தப்படுவர் என்பது குறித்து உறுதியான தகவல்களை இதுவரை இலங்கை அரசாங்கம் வெளியிடவில்லை.
அத்துடன், குறித்த பிரதேசங்களிலுள்ள கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்பட்ட பின்னரே மக்கள் குடியமர்த்தப்படுவர் எனவும், ஆனால், கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றுவதற்கு எவ்வளவு காலம் செல்லும் என்பதை உறுதிப்படுத்த முடியாதெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அண்மையில் அறிவித்திருந்தார். அத்துடன், கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை துரித்தப்படுத்த முடியாது எனவும், இதற்கு நீண்ட காலம் எடுக்கக் கூடும் எனவும் ஜனாதிபதி கூறியிருந்தார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் நாயகம் பான் கீ மூன் கடந்த மே மாதம் வவுனியா முகாமிற்கு சென்றிருந்த வேளையில், தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் 80 வீதமானவர்கள் இவ்வருட இறுதிக்குள் மீளக்குடியமர்த்தப்படுவர் என இலங்கை அரசாங்கம் உறுதியளித்திருந்தது.
இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.6 பில்லியன் டொலர் கடனுதவியைப் பெற்றுக்கொள்வதற்காக சில நிபந்தனைகளுக்கு இணக்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கை அரசாங்கம் அனுப்பியுள்ள கடிதத்தில், இடம்பெயர்ந்த முகாம்களில் உள்ள மக்களில் 70 முதல் 80 வீதமானோர் இவ்வருட இறுதிக்குள் மீளக்குடியமரத்தப்படுவர் எனக் கூறியுள்ளது.
மீளக்குடிமர்த்தப்படுவர்களின் எண்ணிக்கை, மே மாதம் 80 வீதமாகவிருந்த நிலையில், ஜூலை நடுப்பகுதியில் அது, 70 வீதமாகக் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியம் கடனுதவிக்கான அங்கீகாரத்தை வழங்குவதற்கு முன்னர், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம வெளியிட்டிருந்த அறிக்கையில், இவ்வருட இறுதிக்குள் 60 வீதமான மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் முரணான உறுதிமொழிகளை வழங்கியுள்ள நிலையில், இவ்வருட இறுதிக்குள் குறைந்தத 60 வீதமான மக்களாவது மீளக்குடியமர்த்தப்படுவரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.