08.04.2009.
இலங்கையின் பாதுகாப்பு நிலைவரத்தை கருத்திற்கொண்டு அபிவிருத்திக்கான நிதி உதவியை வழங்குவதில்லையென நெதர்லாந்து தீர்மானித்துள்ளது.
1970 களில் இருந்து இலங்கைக்கு நெதர்லாந்து வருடாந்தம் 3040 மில்லியன் யூரோக்கள் பெறுமதியான உதவிகளை வழங்கி வருவதாக வன்செயலினால் இலங்கையில் பணிபுரிவது மிகக் கடினமானது என்று தாங்கள் கருதுவதாகவும் அதனால் இலங்கையுடனான பங்குதாரர் உதவுமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதாகவும் அந்நாட்டின் அபிவிருத்தித்துறை அமைச்சர் பேர்ட் கொயன்டல்ஸ் பி.பி.சி.க்கு கூறியுள்ளார்.
அத்துடன் இதன் விளைவாக இலங்கையுடனான முழுமையான அபிவிருத்தித் திட்டம் முடிவுற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அல்பேனியா, ஆர்மோனியா,பொஸ்னியா, ஹேர்சேசோவினா, கேப்வேட்டி, எரித்திரியா, மசிடோனியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கான உதவியை நிறுத்தும் தீர்மானம் குறித்து ஜனப் பிரதிநிதிகள் சபைக்கு அமைச்சர் கொயன்டர் வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.
உதவி உறவுகளுக்கு அரசியல் பரிமாணம் அவசியமென்று ஜனப்பிரதிநிதிகள் சபைக்கு எழுதிய கடிதத்தில் கொயன்டர் வலியுறுத்தி கருத்து தெரிவித்திருக்கிறார்.
அரசியல் சூழ்நிலையாலேயே இலங்கை மற்றும் எலித்திரியாவுக்கான உதவியை நிறுத்தியிருப்பதாக டச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சிபெற சர்வதேச நாணய நிதியத்திடம் 1.9 பில்லியன் டொலர்களை கடன் உதவியாக இலங்கை கோரியிருக்கும் நிலையில் நெதர்லாந்து அரசின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.