Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை மறைக்க ஒருபோதும் முயற்சித்ததில்லை:தயான் ஜயதிலக

  
 
  தற்போதைய அரசாங்கம் மட்டுமல்ல. எந்தவொரு அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களையும் மறைக்க ஒருபோதும் முயற்சித்ததில்லை. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பிரசாரத்தை தடுக்கும் முயற்சியிலேயே நான் ஈடுபட்டேன். பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட எந்தச் சந்தர்ப்பத்தையும் மறைக்கவோ, நியாயப்படுத்தவோ முயற்சிக்கவில்லை”   

    ஜெனிவாவுக்கான இலங்கையின் விசேட பிரதிநிதியாகப் பணியாற்றிய தயான் ஜயதிலக  பதவி நீக்கப்பட்ட பின்னர்  முதன்முறையாக “கிறவுண் வியு”  என்ற இணையத்தளத்திற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அந்த செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அரசாங்கத்தின் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு வெள்ளையடிக்கும் முயற்சியில் நான் ஒருபோதும் ஈடுபடவில்லை . அத்துடன், அரசாங்கத்திற்கு அவ்வாறு வெள்ளையடித்தமைக்கான ஒருசந்தர்ப்பத்தை யாராலும் கூறமுடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.  

 திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டதையோ அல்லது மூதூரில் 17 தொண்டுப் பணியாளர்கள் கொல்லப்பட்டதையோ ஒருபோதும் மறைக்க நான் முயற்சிக்கவில்லை. விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தும் நீங்கள் மௌனமாக இருந்துள்ளீர்கள் எனக் கேட்டகப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தயான் ஜயதிலக, ‘இலங்கை அரச படைகளினால் ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை. புலிகள் மனிதக் கேடயமாக மக்களை வைத்திருந்ததன் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இடம்பெயர்ந்து வந்த மக்களின் தகவல்களின்படி படையினர் தங்களால் இயன்ற    பணியைச் செய்துள்ளார்கள் எனத் தெரிகிறது. உலகின் வேறுநாட்டுப் படைகளுடன் ஒப்பிடும் போது இலங்கைப் படையினர் சிறப்பாக செயற்பட்டுள்ளார்கள் என்றே கூறவேண்டும். இறுதி போரின் போது ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என பதிலளித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ’13வது திருத்தச் சட்டத்தைப் பற்றிய எனது பார்வை ஆழமானது. 95இல் நான் வெளியிட்ட முதல் புத்தகத்திலேயே இதுகுறித்து ஆழமாக குறிப்பிட்டுள்ளேன். 13வது திருத்தச் சட்டத்தை ஆதரித்ததன் காரணமாக எனது அரிய பல நண்பர்கள் கொல்லப்பட்டனர். விஜயகுமாரதுங்கவை இழந்தேன். மற்றுமொரு நண்பரான தேவபண்டார சேனரத்னவை இழந்தேன். அவர் 1989ம் ஆண்டு ஆரம்பத்தில் ஜே.பி.வி.யினரால் படுகொலை செய்யப்பட்டார். ஈ.பி.ஆர்.எல்.எப். நண்பர்கள் பலர் கொல்லப்பட்டனர். பத்மநாபாவை நான் இழந்தேன். 13வது திருத்தச் சட்டத்தில் இவர்களுடைய பங்களிப்பு அதிகம். அத்துடன் 13வது திருத்தச்சட்டம் குறித்த எனது ஈடுபாடும் ஆழமானது.”

‘அடுத்த வருட ஆரம்பத்தில் தேர்தல் நடத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது. அந்தச் சந்தர்ப்பத்தில் மீளவும் தமிழ் மக்கள் தமது அடையாள அரசியல் காரணமாக தமது அபிலாசைகளை வெளிப்படுத்த தமிழ் பிரதிநிதிகளையே தெரிவு செய்வார்கள். நாடாளுமன்றத்தில் மீண்டும் இந்தப் பிரச்சினை எழுப்பப்படும். ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் 13வது திருத்தச் சட்டம் வேண்டும் என்கிறார். 13வது திருத்தச் சட்டம் இப்போது அமுல்படுத்தப்பட வேண்டும். 13 பிளஸ் விடயங்களைப் பின்னர் பார்க்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவாவிற்கான இலங்கையின் விசேட பிரதிநிதியாக மஹிந்த ராஜபக்~ அரசாங்கத்தினால் 2007ம் ஆண்டு ஜூன் 7ம் திகதி தயான் ஜயதிலக்க நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2009ம் ஆண்டு ஜூலை 20ம் திகதி முடிவடையவிருந்த போதிலும், அதற்கு முன்னரே அவர், இலங்கை அரசாங்கத்தினால் திருப்பியழைக்கப்பட்டார்.

13வது திருத்தச் சட்டம் அமுலாக்கத்தை வலியுறுத்தி இவரால் வெளியிடப்பட்ட கருத்துக்கள், இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியமையால், பதவிக் காலம் முடிவதற்கு முன்னர் இவர் திருப்பியழைக்கப்பட்டதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

Exit mobile version