காரணம் இராணுவம் தொடர்பான குற்றச்சாட்டை முன்னாள் இராணுவ தளபதியே முன்வைத்துள்ளார். இதனால் மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் 58 ஆம் படைப்பிரிவின் அதிகாரிகள் என அனைவருக்கும் அபாயகரமான நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர்களால் இனி இங்கிலாந்துக்கோ சிங்கப்பூருக்கோ தனிப்பட்ட விஜயமாகவோ மருத்துவ தேவைக்காகவோ செல்ல முடியாத நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. காரணம் நான் 58 ஆம் படைப் பிரிவை சேர்ந்தவன் அல்ல என்று அவர்களால் சத்தியக்கடதாசி கொண்டு செல்ல முடியாது. இராணுவ அதிகாரிகள் தமது பிள்ளைகளுக்கு வைத்தியம் செய்வதற்கும் வெளிநாடு செல்ல முடியாத நிலைமை காணப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை இந்த விவகாரத்தை பரிசீலித்து யுத்தக் குற்ற நீதிமன்றம் விசாரணை நடத்தவேண்டும் என்று பணிப்புரை விடுக்கலாம். இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஹிட்லரின் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நியூரன் பேர்க் நீதிமன்றம் விசாரணை நடத்தியது.
அதன்போது உயர்மட்டம் தமக்கு அளித்த கட்டளையை தாம் நிறைவேற்றியதாக குறித்த இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், ஒவ்வொரு இராணுவ வீரருக்கும் தனிப்பட்ட பொறுப்பு உள்ளது என்று கூறி 11 இராணுவ அதிகாரிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவ்வாறான வரலாறுகள் உள்ளன.
இலங்கையில் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையிலும் அவர்களின் சர்வதேச வலையமைப்பும் இயந்திரமும் இன்னும் வலுவாகவே உள்ளன. அவர்கள் இலங்கையின் பொருளாதார கட்டமைப்பை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். இலங்கைக்கான உதவிகளை தடுத்தல், ஜீ. எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நிறுத்தல் போன்ற விடயங்களை செய்ய பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் ஐரோப்பிய சந்தையில் எமது பிரவேசத்தை தடுப்பதற்கு முயற்சிக்கப்படுகின்றது.
ஏற்கனவே எமக்கு எதிராக ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் பல நடவடிக்கைகள் எடுப்பதற்கு முயற்சிக்கப்பட்டன. ஆனால் அதன்போது நாங்கள் வெற்றிபெற்றோம். ஆனால் அந்த விடயங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படலாம். காரணம் பாரிய சாட்சியாக ஜெனரல் சரத் பொன்சேகாவின் கூற்று அமைந்துள்ளது. இதனைவிட பலமான சாட்சி இருக்க முடியாது. என செய்தியாளர் மாநாட்டில் பீரிஸ் தெரிவித்தார்.