இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவோ அன்றி ராஜபக்சவின் அதிகாரத்தின் ஒரு பகுதியையாவது தமது நேரடியான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவோ அமரிக்க முயற்சி செய்கிறது. இதனையெல்லாம் தெரிந்திருந்தும் புலம் பெயர் அமைப்புக்கள் அமரிக்காவின் அடியாட்படையாகச் செயற்படுகின்றன. இன அழிப்பும், போர்க்குற்றமும் குறித்து இதுவரை அமரிக்காவோ அதன் நட்பு நாடுகளோ, உலகின் எந்த அதிகார அமைப்புக்களோ துயர் கொண்டதில்லை.
மக்களுடைய விடுதலை உலகின் கொலைகாரர்களை நம்பி குறுக்குவழிகளில் பெற்றுக்கொள்வதல்ல என்பதையும், அது மக்கள் போராடியே பெற்றுக்கொள்ள வேண்டியது என்பதையும் மீண்டும் ஒரு தடவை ‘சர்வதேச சமூகம்’ என்ற அடைமொழியில் அழைக்கப்படும் உலகின் ஏகபோக நாடுகளின் நடவடிக்கைகள் பாடம் கற்பிக்கின்றன.
புலம் பெயர் நாடுகளிலிருந்து விதைக்கப்படும் போலி நம்பிக்கைகள் இலங்கையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களைப் போராடவேண்டாம் என்று கூறுகின்றன. புலம் பெயர் நாடுகளில் மக்களின் அவலத்தில் வியாபாரம் நடத்தும் கும்பல்கள் வழங்கும் போலியான நம்பிக்கைகளும் பிரகடனங்களும் ஒரு அசைவையும் ஏற்படுத்தப்போவதில்லை. ராஜபக்ச அரசின் இனச் சுத்திகரிப்பு எந்தத் தடையும் இன்றி நடைபெறுகின்றது.
மக்கள் தமது உரிமைகளுக்காகப் போராடத் தயாராகவேண்டிய தேவையை இன அழிப்பின் நான்காவது ஆண்டு தெளிவுபடுத்துகின்றது.
மக்கள் புரட்சிசெய்ய வேண்டுவதற்கான எழுத்துக்களே இனிமேல் எமது தேவை. அமரிக்க அரசு போன்ற அதிகாரங்களின் தயவல்ல. உலகம் முழுவதும் ஒடுக்குமுறை அஞ்சாமல் எதிர்த்துப் போராடும் மக்கள் கூட்டங்களுடன் ஐக்கியமும் இணைவும் ஏற்படுத்தப்பட வேண்டும். அவர்களுடனான சகோதரத்துவம் அவசியமானதாக்கப்பட வேண்டும். உலக் நாடுகளது உளவு நிறுவனங்களுக்கு அடிமை வேலை செய்வது நிறுத்தப்பட வேண்டும்.இனிமேலும் இதனைத் தாமதித்து அமரிக்காவையும் நட்புநாடுகளையும் நோக்கிப் படையெடுக்கும் அமைப்புக்கள் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.