புலிகளின் அமைப்பு இலங்கை பேரினவாத அரசிற்கு எதிரான அரசியல்மயப்பட்ட எதிர்ப்பியக்கமாக இருந்ததில்லை.பல்வேறு சூழ்நிலைகளில் இலங்கை அரசிற்கு எதிராக போராடிய ஜனநாயக சக்திகளை அச்சுறுத்தியும் வந்தனர். ஈழத் தமிழர் விடிவுக்கு தாங்களே ஏக போக உரிமை எடுத்துக் கொண்ட புலிகள் எண்பதுகளை விட மோசமான ஒரு காலத்தை தமிழ் மக்களுக்கு பரிசளித்து விட்டு அவர்களும் இல்லாமல் போயினர். இன்று பேரினவாத இலங்கை அரசிற்கு எதிராகவோ அதன் இறுகிய இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராகவோ யாரும் பேசவோ,போராடவோ முடியாத சூழல், பிரபாகரனுக்குப் பிறகு புலிகளின் தலைமையை எடுத்துக் கொண்ட கே.பி இலங்கை அரசால் கடத்தி கைது செய்யப்பட்டிருக்கிறார். கடத்திக் கைது செய்வதோ கைது செய்தவர்களை சாட்சியமற்ற முறையில் கொன்று குவிப்பதோ இலங்கை அரசிற்கு புதிதல்ல, அவர்கள் 16 பத்திரிகையாளர்களைக் கொண்றிருக்கிறார்கள். முப்பதிற்கும் மேற்பட்ட ஊடகவியளார்கள் தப்பிச் சென்றிருக்கிறார்கள். இலங்கை பாசிச சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறது. கடல் தாண்டியும் தன்னால் கொலைக் கரங்களை விரிவு படுத்த முடியும் என்பதை அது நிரூபித்திருப்பதன் மூலம் ஆயுதப் போராட்டம் அல்ல அஹிம்சைப் போராட்டமல்ல எந்த ஒரு எதிர்ப்பியக்கத்தையும் நசுக்கிவிடும் கொலை வெறியோடு பிராந்திய வல்லரசுகளின் ஆதரவோடு அது களமிறங்கியிருக்கிறது.
கே.பி எனப்படுபவர் இலங்கைக்கு தேவையானவராக இருக்கலாம். ஆனால் அவரைக் கடத்தி கைது செய்திருப்பதன் மூலம் ஈழம் தொடர்பாக சிந்தனைகளை முன்னெடுக்கும் அனைவருக்குமே இலங்கை அச்சுறுத்தல் விடுத்திருக்கிறது. தவிறவும் ஒரு இனத்தின் ஒரு பகுதி மக்களை இனப்படுகொலை செய்ததன் மூலம் நாட்டின் அதே இனத்தின் ஏனையப் பகுதி மக்களை அச்சுறுத்தி வைத்திருப்பதன் மூலம் இனப்படுகொலை தொடர்பாக தப்பிக்க நினைக்கிற இலங்கை. இப்போது ஈழம் குறித்து எவர் ஒருவர் பேச முற்பட்டாலும் அவரையும் கொலை செய்யவோ, கடத்தவோ அஞ்சாது என்பது இப்போது தெளிவாகியிருக்கிறது.