Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கும் தற்காலிக மோதல் தவிர்ப்பு வெறும் கண் துடைப்பு:LTTE

இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கும் தற்காலிகமான மனிதநேய மோதல் தவிர்ப்பானது சர்வதேசத்தை ஏமாற்றும் கண்துடைப்பு என விடுதலைப் புலிகள் குற்றஞ்சாட்டியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்காலிக மோதல் தவிர்ப்பிற்குச் செல்வதைவிடுத்து, மக்களின் மனிதநேயத் தேவைகளைக் கவனத்தில் கொண்டு நிரந்தர போர்நிறுத்தமொன்றுக்கு அரசாங்கம் செல்லவேண்டுமென விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சர்வதேசத்தின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதும், பாதிக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு நன்மை செய்வதும் போன்ற அரசியல் நாடகமொன்றையே இலங்கை அரசாங்கம் தற்பொழுது அரங்கேற்றியிருப்பதாக விடுதலைப் புலிகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

இந்தத் தற்காலிக மோதல் நிறுத்தமானது புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கப் படைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் விடுமுறையேனவே தாம் கருதுவதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

மோதல் நிறுத்தத்தை அறிவித்துவிட்டும் இராணுவத்தினர் அப்பாவிப் பொதுமக்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்துவதாக விடுதலைப் புலிகள் தமது அறிக்கையில் குற்றஞ்சாட்டியிருப்பதாகத் தெரியவருகிறது.

Exit mobile version