27.09.2008.
இலங்கை அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐரோப்பிய ஆணைக்குழு கடுமையாக எச்சரித்துள்ளதுடன் சடுதியாக மரண தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கைகளில் புலிகள் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்திருக்கும் அதேசமயம், அகதிகளுக்கான நிவாரண விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கிறது.
இலங்கையின் ஏற்றுமதிகள் வரிகளின்றி ஐரோப்பிய சந்தைகளுக்குச் செல்வதற்கான ஜிஎஸ்பி+ வர்த்தக உடன்படிக்கையை நீடிப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் முக்கியமான தீர்மானத்தை எடுப்பதற்கு இன்னமும் சில வாரங்களே இருக்கும் நிலையில் ஐரோப்பிய ஆணைக்குழுவிடமிருந்து இந்த எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அரச படைகளால் மனித உரிமை துஷ்பிரயோகங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளையிட்டு ஐரோப்பிய ஒன்றியம் விசனம் தெரிவித்து வருவதால் ஜிஎஸ்பி+ சலுகைகள் இழக்கப்பட்டுவிடுமென அஞ்சுவதாக இலங்கையின் ஆடை ஏற்றுமதித் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த உடன்படிக்கையில் அனுகூலம் பெறும் தொழிற்றுறையாக ஆடை ஏற்றுமதி தொழிற்றுறையே உள்ளது.
கிளிநொச்சியை அரச படைகள் நெருங்கியுள்ள நிலையிலும் இடம்பெயர்ந்தோர் பாதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக நிவாரண உதவி வழங்கும் அமைப்புகள் கவலை தெரிவித்துள்ள தருணத்திலும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
சகல தரப்பினரும் மனித உரிமைகளை தொடர்ந்தும் மீறிவருவதாக அறிக்கைகள் கிடைத்துள்ளன. புலிகள் பலவந்தமாக ஆட்களை திரட்டுவதாகவும் அறிக்கைகள் வெளிவந்துள்ளன. இதனையிட்டு நான் மிகவும் கவலையடைந்துள்ளேன், என்று ஐரோப்பிய ஆணைக்குழுவின் வெளியுறவுகள், ஐரோப்பிய அயலுறவு கொள்கை என்பனவற்றுக்கு பொறுப்பான ஆணையாளர் பெனிற்றா பெரேரா வோல்ட்னர் கூறியுள்ளார்.
“இந்த வன்முறைகள் அவசியம் நிறுத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் இணைத் தலைமைகள் இவ்வாரம் நியூயோர்க்கில் நடத்திய சந்திப்பில் இலங்கையின் மோதல் தொடர்பாக ஆராயப்பட்டதாகவும் பெனிற்றா கூறியுள்ளார்.
பொதுமக்களின் உரிமைகளை அரசாங்கமும் புலிகளும் உறுதிப்படுத்த வேண்டும். இடம்பெயர்ந்தோர் கௌரவமாக நடத்தப்படுவதுடன் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற் கிணங்க அவர்கள் முழுமையாக பராமரிக்கப்பட வேண்டும். அவர்களின் பாதுகாப்பும் சுதந்திரமும் மிக முக்கியமானவை என்று பெனிற்றா கூறியுள்ளார்.
அத்துடன் சுயாதீனமான கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் நிவாரணப் பொருட்கள் விநியோகம் பாதுகாப்பான முறையில் பாதிக்கப்பட்டோரை சென்றடைவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஐ.நா. மற்றும் அதன் முகவரமைப்புகள், அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கடுமையான பொறுப்பை மேற்கொண்டுள்ளன. அவற்றுக்கு எமது முழுமையான ஆதரவை தெரிவிக்க விரும்புகிறோம் என்றும் பெனிற்றா கூறியுள்ளார்.