தமிழ் மக்களின் இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளை தரைமட்டமாக்கிய இராணுவத்தினருக்கு வீடுகளையும், வீடுகளை இழந்த தமிழ் மக்களுக்குப் பொட்டல் காட்டையும் காட்டியிருக்கிறது இந்த வரவு-செலவு திட்டம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
2013ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தமித் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1970களின் பிற்பகுதியில் ஆரம்பித்த யுத்த வரவு-செலவுத் திட்டம் இன்றுவரை தொடர்கின்றது. இந்த நாட்டில் யுத்தத்தை யார், யாருக்கு எதிராக நடத்துகிறார்கள் என்பது உலகறிந்த விடயம்.
யுத்தத்தில் வெற்றிபெற்று விட்டோம் என்று வருடாந்தம் மிகப்பெருந்தொகை செலவில் வெற்றிவிழாக் களியாட்டங்களையும் போர் வெற்றியின் அனுபவங்களை எம்முடன் பகிர்ந்துகொள்ளுங்கள் என்று சாகச நிகழ்ச்சிகளையும் நடத்துகின்ற இந்த அரசாங்கம், யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகள் கழிந்தும் பாதுகாப்பிற்கென மிகப்பெரும் நிதியை ஒதுக்கியிருப்பது தமிழ் மக்களுக்கு எதிரான அரசின் யுத்தம் இன்னமும் முடியவில்லை என்பதையே காட்டுகிறது.
தமிழ் மக்களின் இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளை தரைமட்டமாக்கிய இராணுவத்தினருக்கு வீடுகளையும் வீடுகளை இழந்த தமிழ் மக்களுக்குப் பொட்டல்காட்டையும் காட்டியிருக்கிறது இந்த வரவு-செலவு திட்டம்.
வீடுகளை இழந்தவர்கள் மரங்களின்கீழ் வாழ, வேறு மாகாணங்களில் வாழ்ந்தவர்களை சகல வசதிகளுடன் கூடிய வீட்டுத்திட்டங்களில் குடியேற்றி வருகிறது. வீடுகளை இழந்தவர்களுக்கு வீட்டைக்கட்டிக் கொடுக்காததுடன், இந்தியாவால் வழங்கப்படுகின்ற வீடுகளைக்கூடத் தட்டிப்பறித்து, இந்த அரசாங்கம் அவர்கள் உயிர்வாழ்தலை ஆபத்திற்குள்ளாக்குகிறது.
யுத்தத்தால் இடம்பெயர்க்கப்பட்ட சுமார் மூன்று இலட்சம் மக்களை முள்வேலிக்குள் அடைத்து வைத்த நாள்முதல் இன்றுவரை இந்த அரசாங்கம் எமது மக்களின் மீள்குடியேற்றத்திற்கோ மறுவாழ்விற்கோ தனது நிதியில் ஒருசதத்தைக்கூட ஒதுக்கவில்லை.
இக்காலகட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேசத் தொண்டு நிறுவனங்களின் உதவிகள் மட்டுமே எமது மக்களை இன்றுவரை உயிருடன் வைத்திருக்கின்றது. மாறாக, அக்காலகட்டத்தில் இவர்களுக்காகப் பெருந்தொகைப் பணத்தைத் தாம் செலவழித்ததாகப் போலிப் பிரசாரம் மேற்கொண்டார்கள்.
இன்றும்கூட வன்னியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு, மன்னார் மாவட்டத்தில் முள்ளிக்குளம் போன்ற பகுதிகளிலும் யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் சம்பூர் ஆகிய இடங்கள் உள்ளடங்கலாக ஏராளமான இடங்களில் அந்த மண்ணில் தமது சொந்தக் காணிகளில் நிரந்தரமாக வாழ்ந்து வந்த எமது மக்கள் மீள்குடியேற அனுமதி மறுக்கப்படுகின்றது.
செட்டிகுளத்தில் இடம்பெயர்க்கப்பட்ட மக்கள் தங்கியிருந்த சுமார் 6,200 ஏக்கர் உள்ளிட்ட ஏராளமான ஏக்கர் காணிகள் வடக்கு-கிழக்கில் அபகரிக்கப்படுகின்றன.
வீடுகள், கால்நடைகள், தோட்டங்கள், வயல்கள் என தமது வாழ்வாதாரத் தேவைக்கேற்ப வசதியாக வாழ்ந்த எமது மக்களின் அத்தனை சொத்துக்களையும், வளங்களையும், வாழ்வாதாரங்களையும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் அழித்தொழித்த இந்த அரசாங்கம், அந்த மக்களின் வீடுகளைக் கட்டவோ, வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கவோ இன்றைய வரவு-செலவுத் திட்டத்தில்கூட ஒரு சதமேனும் ஒதுக்கவில்லை.
மாறாக, அவர்கள் வாழ்ந்து வளப்படுத்திய நிலங்களையும், வாழ்வாதாரங்களாகத் திகழ்ந்த பயன்தரு மரங்களையும் கொண்ட செழிப்பான நிலங்களையும் இராணுவம் அபகரித்துக் கொண்டு, அவர்கள் பூஜ்யத்திலிருந்து தமது வாழ்க்கையைத் தொடங்குமாறு கையேந்து நிலையில் அவர்களைக் காடுகளில் குறுகிய நிலப்பரப்பில் தள்ளியிருக்கின்றது.
பொருளாதாரத்தில் தன்நிறைவு பெற்று வாழ்ந்த மக்களை நாதியற்றவர்களாக்கிக் கையேந்த வைத்து, அவர்களை உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் பலவீனப்படுத்துவதன் மூலம் அவர்களின் ஆயுட்காலத்தைக் குறைக்கும் மறைமுகத் திட்டத்துடன் இந்த அரசு செயற்படுகின்றதா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது. மிருகங்களின் உயிரின் மேல் காட்டப்படும் அக்கறைகூட எமது மக்களின்மேல் காட்டப்படுவதில்லை.
எமது மக்களின் அழிக்கப்பட்ட வாழ்வாதாரங்களை மீட்டெடுக்க எந்தவிதமான ஒதுக்கீடும் இந்த வரவு-செலவுத் திட்டத்திலும் மேற்கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் தமது வாழ்வாதாரத்தை மீட்டுக்கொள்ள ஏனைய நாடுகளால் வழங்கப்பட்ட உதவிகளைக்கூட இவ்வரசு தட்டிப்பறிப்பதன் மூலம் அவர்களது வாழ்விற்கான வழிகளை அடைத்து மீள முடியாத சகதிக்குள் தள்ளுகிறது.
வடமத்திய மாகாணம் வரையிலான குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருக்கிறது. ஆனால் வன்னிப் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான குளங்கள் புனரமைக்கப்பட வேண்டும் என்று நான் கடந்த வரவு-செலவு திட்ட உரையிலும் குறிப்பிட்டிருந்தேன். அவை இன்னமும் புனரமைக்கப்படாமல் உள்ளன.
மாறாக, மன்னார் மாவட்டம் சன்னாரைப் போன்று வன்னியில் பல குளங்களைச் சுற்றி இராணுவம் தனது முகாமை அமைப்பதன் மூலம் அக்குளங்களின் நீரைப் பயன்படுத்த முடியாமல் மக்கள் தடுக்கப்படுகின்றனர். அதற்கும் மேலாக, பெருமளவு விவசாயிகளின் வாழ்வாதாரத்தின் அடிப்படையாக இருக்கும் இரணைமடுக் குளத்தின் நீர் மட்ட உயரத்தை அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள விமானப் படைத்தளத்தின் பாதுகாப்பு கருதி 32அடியிலிருந்து 27அடியாகக் குறைத்ததன் மூலம் கடந்த போகத்தில் கிளிநொச்சியைச் சேர்ந்த பெருமளவு விவாசயிகளின் நெற்செய்கை அழிக்கப்பட்டது.
மாவிலாறில் புலிகள் குளத்தை அடைத்ததினால் சிங்கள விவசாயிகளின் நெற்செய்கை பாதிக்கப்பட்டதால் உடனடியாக அந்த மக்களுக்கு பெருமளவு இழப்பீட்டு நிதியை வழங்கியதுடன், அதனைக் காரணம்காட்டி மிகப்பெரும் யுத்தம் ஒன்றை இந்த அரசு முன்னெடுத்தது.
ஆனால் இன்று குண்டுத் தாக்குதலால் முள்ளிவாய்க்கால்வரை விரட்டப்பட்டு உயிரைத் தவிர ஏனைய அனைத்தையும் இழந்து கடன்களின் மத்தியிலும் கடின உழைப்பினாலும் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட தமிழ் மக்களின் விவசாயம் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. விமானப்படையின் தேவைக்காக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் அழிக்கப்பட்டதுடன், இந்நிலங்கள் எதிர்காலத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
போரில் தப்பிப்பிழைத்த மக்களில் சிறுவர்கள் மாணவர்கள் உட்பட கணிசமான மக்கள் இன்னும் தமது உடல்களில் துப்பாக்கிச் சன்னங்கள் மற்றும் வெடித்துச் சிதறிய குண்டுகளின் உலோகச் சிதறல்களையும் தலைமுதல் கால்வரை உடலின் பல பாகங்களிலும் தாங்கி ஓர் தொடர்ச்சியான நோயாளிகளாக வாழ்கின்றனர்.
எவ்வளவு பேர் இத்தகைய பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் என்ற புள்ளி விபரம்கூட இந்த அரசாங்கத்திடம் கிடையாது. முள்வேலிக்குள் மூன்றாண்டுகாலம் அடைத்து வைத்திருந்த மக்களுக்கான குறைந்தபட்ச மனதாபிமான பணியான உயிர்காக்கும் முயற்சியைக் கூட இந்த அரசு எடுக்கவில்லை.
தலைமுதல் உடலின் பல்வேறு பாகங்களிலும் குண்டுகளின் சன்னங்களைத் தாங்கிய மாணவர்கள் பாடசாலைகளில் வாந்தி எடுப்பதும் மயங்கிவிழுவதும் வன்னிப் பாடசாலைகளில் அன்றாட நிகழ்வுகளாக உள்ளன.
தாம் உயிருடன் போராடிக் கொண்டிருக்கின்றோம் என்பதை அறியாமலே தமது எதிர்காலம் பற்றிய கனவுகளோடு வாழும் இந்தக் குழந்தைச் செல்வங்களின் பரிதாப நிலையைக்கூட இவ்வரசு பாராமுகமாக இருக்கின்றது. எண்ணிக்கை தெரியாவிடினும் இதனால் பலநூறு மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது இந்த அரசுக்கு தெரியும். அவர்களின் உயிர்காக்க இந்த அரசு ஒரு சதமேனும் ஒதுக்கவில்லை.
குண்டுச் சன்னங்களை உடலில் தாங்கி நோயாளிகளாகி இருக்கும் தமிழ் மக்களின் சிகிச்சைக்கான ஒதுக்கீட்டின் அவசியத்தை 2012ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்ட குழுநிலை விவாதத்திலும் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் எந்த ஒதுக்கீடும் மேற்கொள்ளாதது மட்டுமல்ல எத்தனைபேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து கொள்ளக்கூட இந்த அரசாங்கம் முயற்சிக்கவில்லை.
இலட்சக்கணக்கான மக்களின் மீள்குடியேற்றம், அவர்களது வாழ்வாதாரங்களை மீட்டெடுத்தல், உடலால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்பேணல் என எந்தவொரு அடிப்படையான விடயத்திற்கும் கூட நிதியொதுக்க விரும்பாத இந்த அரசின் போக்கும், நடைமுறையில் அவர்களுக்கு உரித்தானவற்றையே பறிக்கும் அடிப்படை மனிதாபிமானமற்ற போக்கும் தமிழினம் இந்த நாட்டில் இனிமேல் தலையெடுக்கக்கூடாது என்கின்ற மிகவும் உறுதியான நிலைப்பாட்டினை செயற்படுத்தும் வகையானதே.
இத்தகைய அணுகுமுறைகள் மூலம் தமிழ் மக்களை விரக்தி அடைய வைத்து நாட்டை விட்டு வெளியேற்றுவது, அல்லது சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு அடங்கி வாழ வைப்பது இவற்றை எதிர்த்து உரிமைக்காகக் குரல்கொடுப்போரை அழிப்பது ஆகியவற்றையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றது. இம்மூன்றுமே இன அழிப்பின் வெவ்வேறு வடிவங்களாகும்.
பயன்படுத்தாத நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று வரவு-செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதானது, வடக்கு-கிழக்கில் தமிழ் மக்களின் நிலங்களைப் பறிக்கும் கபட நோக்கம் கொண்டதாகும்.
தமிழ் மக்களுக்கெதிரான நீண்ட யுத்தமானது இலட்சக்கணக்கான தமிழ் மக்களை நாட்டைவிட்டு விரட்டியது. அந்த மக்கள் மீண்டும் நாட்டிற்குத் திரும்ப வந்து தமது நிலங்களில் குடியேறி புதிய வாழ்வைத் தொடங்குவதற்கேற்ற வகையில் அரசியல் தீர்வொன்றினைக் காண்பதற்குப் பதிலாக, அவர்களின் வெளியேற்றத்தை அரிய சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி, அவர்களது நிலங்களையும் சொத்தக்களையும் கபளீகரம் செய்ய நினைப்பது இனப்படுகொலை தொடர்பான ஐ.நா.சபையின் தீர்மானத்தின்பாற்பட்டதாகும்.
எனவே, இந்த இன ஒழிப்பு வரவு-செலவுத் திட்டத்தையும் அதன் நோக்கங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதுடன்,
தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை அடாவடியாகப் பறிப்பதை அரசு நிறுத்த வேண்டுமென்றும் அத்தகையோருக்குப் பாதுகாப்புக் கொடுப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் குளங்கள் அனைத்தையும் மக்களின் முழுமையான பயன்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டும.
வடக்கு-கிழக்கில் வாழும் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படும்வரை இந்தப் பிரதேசங்களில் காணிப்பதிவு விடயங்களை நிறுத்த வேண்டும். கட்டப்படும் வீடுகளும் வழங்கப்படும் வாழ்வாதார உதவிகளும் யுத்தத்தில் அனைத்தையும் இழந்தவர்களைச் சென்றடைவதை வெளிப்படைத் தன்மையுடன் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.