Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையில் மோதல்பகுதியில் சிறார்கள் பலியாவதை கண்டு ராதிகா குமாரசாமி பேரதிர்ச்சி.

இலங்கை மோதல் நிலைமைகள் மோசமாகிவருவதால் அங்கு சிறார்கள் பலியாவதை கண்டு தாம் பேரதிர்ச்சியடைவதாக ஆயுத மோதல்களில் சிக்கியுள்ள சிறார்களின் நலன்களுக்கான ஐ.நா சபையின் செயலாளர் நாயகத்தின் சிறப்பு பிரதிநிதி ராதிகா குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இந்த மோதல்களால் பாதிக்கப்பட்ட சிறார்களின் நிலைமைகளை கணிப்பதற்காக தங்களின் சிறப்பு பிரதிநிதி ஒருவரை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் தான் பேச்சு வார்த்தைகள் நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

பொதுவான மக்கள் தொகையில் ஏறக்குறைய சரிபாதி சிறார்களாக இருப்பது வழமை என்கிற பொதுவிதியின் அடிப்படையில் பார்க்கும்போது, மோதல் பகுதியில் இன்னமும் சுமார் ஐம்பதாயிரம் பேர் சிக்கியிருக்கிறார்கள் என்னும்போது, அவர்களில் சரிபாதி அதாவது 25,000 பேர் வரை சிறார்களாக இருக்கலாம் என்று தாங்கள் மதிப்பிடுவதாகவும் அவர் கூறினார்

”குழந்தைகள் பணயக்கைதிகளாக பிடிக்கப்படக்கூடாது. அவர்களை கட்டாயப்படுத்தி போராளிகளாக மாற்றி ஆயுத பாவனைகளில் அவர்களை ஈடுபடுத்தக்கூடாது. விடுதலைப்புலிகள் தம்மிடம் இருக்கும் அனைத்து சிறார்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அப்படி விடுவிக்கப்படும் சிறார்கள், அவர்களின் குடும்பங்களின் பராமரிப்பில் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படவேண்டும். மோதலில் இருந்து தப்பிவந்த சிறார்கள் அரசால் உருவாக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்கள் சர்வதேச தரத்தில் அமைக்கப்படவில்லை.” என்றார் ராதிகா குமாரசாமி.

Exit mobile version