Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையில் போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக இன்று லண்டனில் வழக்குப் பதிவு

தமிழ் மக்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்துள்ள சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான போர்க்குற்ற நபர்களுக்கு எதிராக லண்டன் வெஸ்ற் மினிஸ்ரர் நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் பிடியாணை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில், உலகத் தமிழர் பேரவையின் அனுசரணையுடன் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் சார்பில் நீதிகேட்டு இந்த வழக்குத் தாக்கல் இடம்பெற்றது.
உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்திற்குரிய எஸ்.ஜே.இம்மானுவேல், பிரித்தானியா மற்றும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் சார்பில் இந்த வழக்கை, பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் றையன் நீதிமன்றில் தாக்கல் செய்திருக்கின்றார்.
முதன்மை போர்க்குற்ற நபராக சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச உள்ள நிலையில், அவருடன் லண்டன் வந்திருந்த அவரது பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியான மேஜர் ஜெனரல் சஜி கலகே உட்பட பலருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மேஜர் ஜெனரல் சஜி கலகே, தமிழ் மக்களிற்கு எதிரான போர் உக்கிரமடைந்திருந்த காலப்பகுதியில் போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா படையணிகளில் ஒன்றிற்கு தலமை தாங்கியிருந்தவர்.
இதேவேளை, இவர்கள் இருவரும் அடங்கிய குழுவினர் திட்டமிட்டதற்கு முன்பாக நேற்று பிரித்தானியாவைவிட்டு அவசரமாக வெளியேறி, இன்று சிறீலங்காவை சென்றடைந்துள்ளனர்.
இன்றைய வழக்குப் பதிவு நிகழ்வில் பிரித்தானிய தமிழர் பேரவையின் மூத்த உறுப்பினர்கள் சுகந்தன், அனோஜா, ரவி, ஸ்கந்தா போன்றவர்களும், உலகத் தமிழர் பேரவையின் சார்பில் சுரேன் சுரேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version