25.12.2008.
இலங்கையில் பேச்சுச் சுதந்திரம், ஊடக சுந்திரம் என்பன குழிதோண்டிப் புதைக்கப்பட்டு, உண்மைகள் மறைக்கப்பட்டு, பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மறை மாவட்டங்களின் துணை ஆயர் அருட்கலாநிதி பொன்னையா ஜோசஃப் கூறினார்.இலங்கையில் வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் மனித உரிமைகளுக்கு எதிராக உரத்துப் பேசியவர்கள் ஊமைகளாகிவிட்டதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு புனித மரியாள் இணைப்பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் ஆராதனையில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“சமாதானத்துக்கான யுத்தம் எனக் கூறிக்கொண்டு அப்பாவி மக்கள் மீது குண்டுமழை பொழியப்படுகிறது. மனித உரிமைகள் மீறப்பட்டு மனித மான்பு சிதைக்கப்பட்டுள்ளது. உரக்கக் குரல் கொடுத்தவர்கள் தற்பொழுது ஊமைகளாகிவிட்டனர்” என அவர் கூறினார்.
காணாமல் போதலகள், கடத்தல்கள் அதிகரித்தநிலையில் காணப்படுவதுடன், உண்மையைச் சுட்டிக்காட்டி உறைக்கப் பேச விரும்புபவர்கள் கொலை மிரட்டல்களுக்கு அஞ்சி ஊமைகளாகிவிட்டதாகவும் துணை ஆயர் தனது உரையில் குறிப்பிட்டார்.