22.10.2008.
ஒருங்கிணைந்த இலங்கையின் இறையாண்மையை பாதிக்காத வகையில் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண இந்தியா விரும்புகிறது. இலங்கையில் தமிழ் மக்கள் மனிதாபிமான பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். எனவே இனப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்து இலங்கையில் அமைதியை ஏற்படுத்த வேண்டும்.
இனப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியாக தீர்வு காண முடியாது. அரசியல் ரீதியாகத்தான் தீர்வு காண முடியும் என்று ஏற்கனவே வலியுறுத்தி உள்ளோம். அங்கு பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு தேவையான மருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கடந்த ஒரு வாரமாக வழங்கப்படுகிறது.
ஐ.நா.சபை மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக நிவாரண உதவிகள் சென்றடைவதை உறுதிப் படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து புதுடில்லியில் நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த இந்திய வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் கூறியதாவது;
இலங்கையிலிருந்து உயர்மட்டத்தூதுக்குழுவினர் புதுடில்லிக்கு வருகைதந்து விடயங்களை ஆராய்ந்த பின்னரே இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் கொழும்புப் பயணம் தொடர்பாக முடிவெடுக்கப்படும்.இப்போது அது தொடர்பாக தீர்மானிக்கப்படவில்லை.
அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வதற்கான திகதி பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இலங்கையில் இருந்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சு உயர் மட்டகுழு இந்தியா வந்தபிறகு, பிரணாப் முகர்ஜியின் பயணம் பற்றி தீர்மானிக்கப்படும்.