இன்னும் இனப்படுகொலை நடந்துகொண்டிருக்கும் இலங்கையில் இவ்வகையான களியாட்டங்களை இறக்குமதி செய்வது என்பது மக்கள் மத்தியில் போராட்டக் கலாச்சரம் உருவாகும் முறைமைய மட்டுப்படுத்தி அழிவுகளை ஏற்படுத்தும் என்பது உண்மை.
ஆனால் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியை இலங்யில் நடத்த வேண்டாம் என்று கூச்சல் போடும் இணையங்கள் பலவற்றின் ஒவ்வொர் அடுத்த செய்திகளும் அரை நிர்வாணமாகத் தெரியும் தென்னிந்திய சினிமா நடிகைகளே என்பதை எவ்வாறு மதிப்பிட முடியும்?
இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு எந்தவகையிலும் குறைவின்றி வெறித்தனத்தையும் வெறுப்பையும் உமிழும் இந்த இனவாதிகள் ஏன புலம்பெயர் நாடுகளில் தென்னிந்தியத் தொலைக்காட்சிகளை இறக்குமதி செய்யும் முகவர்களைக் கண்டிப்பதில்லை?
அரைகுறை ஆங்கிலத்தையும் அரைகுறத் தமிழையும் இணைத்து இந்த இரண்டு மொழிகளையுமே கொலைசெய்யும் தொலைக்காட்சிகளைப் புறக்கணிக்குமாறு ஏன் இவர்கள் கோரிக்கைகளை முன்வைப்பதில்லை?
தென்னிந்தியாவில் மில்லியன்கள் செலவில் தயாரிக்கப்படும் திரைப்படங்களில் வன்முறையையும் பாலியல் வக்கிரங்களையும் புகுத்தி எந்தக் கூச்சமுமின்றி குழந்தைகளுக்குக் கூட விற்பனை செய்யும் கலை வியாபாரத்திற்கு எதிராக இவர்கள் ஏன் பிரச்சாரம் செய்வது கிடையாது?
தமிழ் இலக்கியத்திற்கு ஈழத்துப் படைப்பாளிகளின் பங்கு அளப்பரியது. தேசிய வியாபாரிகள் இவற்றைத் தொட்டுக்கூடப் பார்ப்பது கிடையாது. தெனிந்தியச் சினிமாக் கூத்தாடிகளுக்குப் பதிலாக ஈழத்து இசைக் கலைஞர்களையும், கலைகளையும் இவர்கள் ஏன் ஊக்குவிப்பதில்லை?