Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையில் சிறுவர்கள் வதைக்கப்படுகிறார்கள் : சிறுவர் தினத்தில் அமைச்சர் வாக்குமூலம்

இலங்கையில் மலையகம் மற்றும் வடக்குப் பிரதேசங்களைச் சேர்ந்த சிறார்கள் வேலைக்கு அமர்த்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக சிறுவர் பாதுகாப்பு மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவிக்கின்றார்.

மலையகத்தைச் சேர்ந்த சிறார்கள், குறிப்பாக பெண்பிள்ளைகள் தரகர்கள் மூலம் நகர்ப்புறங்களுக்கு வீட்டுவேலைகளுக்காக கொண்டுவரப்பட்டு பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சியிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் நோக்கில் பதுளை பிரதேசத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட சிறார்கள் 11 பேரை சிறுவர் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மீட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

இவ்வாறான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மக்கள் உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், நாட்டில் சிறார் தொழிலாளர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்பது தொடர்பான புள்ளிவிபரங்கள் எதுவும் அரசின் வசம் இல்லை என்று கூறிய பிரதி அமைச்சர், ஆனால் ஒப்பீட்டளவில், தெற்காசிய நாடுகளில் இலங்கையில் சிறார் தொழிலாளர்கள் குறைந்தளவில் தான் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

சிறார்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதை தடுப்பதற்கு சட்டத் திருத்தங்கள் தேவைப்படுவதாகவும் அதுகுறித்து அரசு கவனம் செலுத்திவருவதாகவும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, சிறார்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் முன்னணி பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 2000 பேர் அளவில் கலந்துகொண்டார்கள்.

இந்த நிகழ்வுகளில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவும் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version