04.09.2008.
இலங்கையில் சிறுவர்களைப் படையில் இணைக்கும் இராணுவத் தலைவர்கள் மற்றும் துணை இராணுவக் குழுவின் தலைவர்களை அமெரிக்காவில் கைதுசெய்வதற்கும் அவர்கள் மீது விசாரணைகள் நடத்துவதற்குமான புதிய சட்டத்திருத்தமொன்றில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் கைச்சாத்திட்டுள்ளார்.
இந்தச் சட்டத்துக்கமைய சிறுவர்களைப் படையில் இணைக்கும் விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
15 வயதுக்குக் குறைவானவர்களைப் படையில் இணைப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கிலேயே இந்தச் சட்டத்தை அமெரிக்கா கொண்டுவந்திருப்பதாகவும், அமெரிக்காவில் மாத்திரமன்றி ஏனைய பகுதிகளிலும் சிறுவர் போராளிகளைத் தடுப்பதற்கே இவ்வாறான சட்டத்திருத்தம் அமுல்படுத்தப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சட்டத்தை மீறுபவர்கள் அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்டால் அவர்கள் 20 வருடங்களுக்கு அல்லது சிறுவர் போராளி ஒருவர் இறக்கும் பட்சத்தில் வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டிய நிலை ஏற்படும். இந்தச் சட்டத்துக்கு எதிராக நடந்துகொள்பவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கும், நாடு கடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
சிறுவர்களைப் படையில் இணைப்பது மிகவும் மோசமான நடவடிக்கை என்பதை உலகத்துக்கு எடுத்துக் கூறுவதற்கே அமெரிக்கா இவ்வாறான சட்டமூலமொன்றைக் கொண்டுவந்துள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. “சிறுவர்களைப் படையில் இணைக்கும் இராணுவத் தலைவர்கள் அமெரிக்காவிற்கு வருவது சிறைத்தண்டனையிலேயே சென்று முடியும்” என அந்த அமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் கடந்த 25 வருடகாலமாக மோதல்களில் ஈடுபட்டுவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் சிறுவர் போராளிகளை இணைத்துக்கொண்டமை தொடர்பாக, 2002ஆம் ஆண்டு ஜனவரிமாதம் முதல் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் யுனிசெப் அமைப்பு 6,284 வழக்குகளைத் தாக்கல் செய்திருப்பதுடன், இதில் 1,426 வழக்குகள் தீர்க்கப்படாமல் உள்ளன. சிறுவர்களைப் படையில் இணைப்பது தொடர்பாக பலர் அறிந்திருந்தபோதும் அச்சம் காரணமாக அவர்கள் எவரிடமும் முறைப்பாடுகள் செய்யவில்லையென மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது. குடும்பத்திலுள்ள மகன் அல்லது மகளை புலிகள் அமைப்பில் இணைப்பதற்கு அனுமதிக்காதவர்கள் அச்சுறுத்தப்பட்டதாகவும், சிலர் கடத்திச்செல்லப்பட்டிருப்பதாகவும் தமக்குத் தகவல்கள் கிடைத்திருந்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது இராணுவப் பிரிவுக்கு நூற்றுக் கணக்கான சிறுவர்களை இணைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. 2004ஆம் ஆண்டு ஏப்பிரல் முதல் 2008ஆம் ஆண்டு செப்டம்பர் வரையான காலப் பகுதியில் யுனிசெப் அமைப்பு 528 வழக்குகளைப் பதிவுசெய்திருப்பதுடன், இதில் 127 நிலுவையில் இருப்பதாகத் தெரியவருகிறது. விளையாட்டு மைதானங்கள், பொது வீதிகள், பல்கலைக்கழகங்கள், வேலைஸ்தலங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளால் சிறுவர்கள் கடத்தப்பட்டிருப்பதாக தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதென மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த வருடம் சட்டவிரோத கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்குள் நுழைந்ததாகக் குற்றஞ்சாட்டி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மீது போர் குற்றஞ்சுமத்துமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்திருந்தது. சிறுவர்களைப் படையில் இணைத்தமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அவர்மீது வழக்குத் தாக்கல் செய்யவேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் உட்பட பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்த. எனினும், கருணா எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
THANKS:www.inllanka.com