Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திர ஊடக அடக்குமுறைக்கு எதிரான அமைப்பு உருவாக்கம்.

21.01.2009.

இலங்கையில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக அதிகரித்துவரும் அழுத்தங்களுக்கு குரல்கொடுப்பதற்காக, சமூக அமைப்புக்கள் மற்றும் மனித உரிமைகள் குழுக்களின் உறுப்பினர்களை உள்ளடக்கிய சுதந்திரத்திற்கு எதிரான அடக்குமுறைக்கு எதிரான முன்னணியொன்றை ஏற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், வர்த்தக அமைப்புக்கள், ஊடகங்களின் தலைவர்கள் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றையதினம் ஜெ.ஆர்.ஜெயவர்த்தனா நிலையத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின்போது சுதந்திரத்திற்கு எதிரான அடக்குமுறைக்கு எதிரான முன்னணியொன்றை உருவாக்குவதற்கான ஆரம்பகட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்த அமைப்பின் அங்கத்தவர்கள் இலங்கை முழுவதும் சென்று, அனைத்து பிரஜைகளுக்கும் உரித்துடைய கருத்துச் சுதந்திரம் குறித்து விளக்கமளிக்கவுள்ளதாகவும் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டது.

நேற்றைய கூட்டத்தின்போது மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் காலநிதி பாக்கியசோதி சரவணமுத்து,  சட்டத்தரணி ஜே.சி.வெலியமுன மற்றும் நிமல்கா பெனாண்டோ ஆகிய மூவரும் ஏற்பாட்டாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3மணிக்கு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தில் சந்திக்கவுள்ள இந்த ஏற்பாட்டுக் குழுவினர், அரசியல், சமூக மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய செயற்குழுவொன்றைத் தெரிவுசெய்யவுள்ளனர்.

இதேவேளை, சண்டே லீடர் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை மற்றும் எம்.ரீ.வீ : எம்.பீ.சீ நிறுவனத்தின் மீதான தாக்குதல்களின் தொடர்ச்சியாக இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு பாரிய அச்சுத்தல் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு அமைப்புக்களும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version