30 ஆண்டு யுத்த வெற்றிக்குப் பின்னர் இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். இதுபற்றி அறிந்துகொள்ளாத, இலங்கை வராதவர்கள் தற்பொழுது நாட்டுக்கு வந்து உண்மை நிலைமையை அறிந்துகொள்வதற்கான தருணம் ஏற்பட்டுள்ளதென பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலா ளர் கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். கோதாபய ராஜபக்ச இனப்படுகொலையின் சூத்திரதாரிகளில் முக்கியமானவரும், முஸ்லிம்களுக்கு எதிராக தோற்றுவிக்கப்பட்ட பொதுபல சேனாவை பின்னணியில் இயக்குபவரும், ஜனநாயக உரிமைகளுக்காகக் குரல்கொடுத்த பலரைக் கொன்றுகுவித்தவருமாவார்.தொப்பிக்கலயில் அமைக்கப்பட்ட பாரம்பரிய உரிமைகள் பூங்கா மற்றும் உயிர்நீத்த வீரர்களுக்காக அமைக்கப் பட்ட இராணுவ ஞாபகார்த்த தூபியைத் திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
தொப்பிக்கல பகுதி வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க இடமாகும். இங்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்தனர். எனினும், கடந்த காலங்களில் இந்த ஒற்றுமைக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. யுத்த வெற்றிக்குப் பின்னர் இங்கு அமைதிச் சூழல் ஏற்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கிலுள்ள வரலாற்றுப் பாரம்பரியம்மிக்க இடங்கள் சுற்றுலாவுக்கும், கல்வி அறிவூட்டும் நோக்கிலும் மக்கள் பார்வையிட வசதிசெய்துகொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது கூறினார்.