Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் தேவை:ஐக்கிய ராஜ்ஜியம் கோரிக்கை

02.04.2009.

இலங்கையில் நடக்கும் மோதல்களில் சிக்கியிருக்கும் பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கிலான மனிதாபிமான போர்நிறுத்தம் ஒன்றை இலங்கை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய ராஜ்ஜியத்தின் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தமது கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுமக்களை மோதல் நடக்கும் பகுதிகளிலிருந்து வெளியேறுவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் என்றும் பலவந்தமாக பொதுமக் களை தமது படையணிகளில் சேர்க்கும் நடவடிக்கையையும் விடுதலைப்புலிகள் கைவிட வேண்டும் என்றும் மிலிபேண்ட் அவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அதேசமயம், விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை காரணம் காட்டி, மோதல்களின் போது ஒரு ஜனநாயக அரசு எப்படி செயற்பட வேண்டும் என்கிற நியாயமான எதிர்பார்ப்பிலிருந்து இலங்கை அரசு தவறுவதை நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரம் தொடர்பான ஐக்கிய ராஜ்ஜியத்தின் நிலைப்பாடு குறித்து, ஐக்கிய ராஜ்ஜிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்த கவலைகள் தொடர்பில் எழுத்துப்பூர்வமான பதில் அளித்த மிலிபேண்ட் அவர்கள் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

மோதல்கள் நடக்கும் பகுதியில் இன்னமும் சிக்கியிருக்கும் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்களை அங்குள்ள ஆபத்தான சூழலில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுவருவது எப்படி என்பது தான் தற்போதுள்ள முக்கிய கவலை என்றும் அவர் கூறினார். 

BBC

Exit mobile version