மேலும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளிலும் கவலைகளிலும் கவனம் செலுத்தாது ஆட்சி அதிகாரங்களை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்கு இரு பிரதான கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் மக்களுடன் அரசியல் விளையாட்டில் ஈடுபட்டன. இதன் மூலம் தமிழ் மக்களின் எதிர்மறையான உணர்வுகள் மட்டும் மோசமடையவில்லை. அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய பாரபட்சமற்ற தீர்வொன்றிற்காக அரசின் வல்லமையும் பலவீனமாக்கப்பட்டுள்ளது எனவும் அன்ட்ரூ சமரதுங்க நல்லிணக்க ஆணைக்குழு முன் தெரிவித்துள்ளார் என்றார்.
பொதுமக்களின் வாழ்க்கை அரசியல் மயப்படுப்படுத்தப்பட்டமை இலங்கையின் அரசியல் வாழ்வின் கொடிய விஷமாக மாறியுள்ளது. தெற்கின் பக்கச் சார்பான அரசியல் நலன்களும் நிகழ்ச்சி நிரலும் வடக்கு, கிழக்கு மக்களின் உண்மையான மனக்குறைகளை செவிமடுப்பதிலிருந்து அரசை தடுத்துள்ளது. வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் குடியியல் மாற்றங்கள், கல்வி மற்றும் பொது நிர்வாகத்துறை மாற்றங்கள், அப்பகுதியில் சிங்கள பிரசன்னத்தையும் கலாசாரத்தையும் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைக்கான அத்தாட்சியாக அமைந்துள்ளது.
புனர்வாழ்வு மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட தமிழ் மக்களின் கவலைகளைத் தீர்த்தல், நாட்டின் சட்ட திட்டங்களைக் கையாளுவதற்குத் தேவையான இராணுவத்தைக் கூடுதலான இராணுவம் வடக்கு, கிழக்கில் இருத்தல், வடக்கு, கிழக்கில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்படாமை போன்றவை தொடர்பாகவும் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதே வேளை கொழும்பு மேல்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ‘வெள்ளைக்கொடி வழக்கு விசாரணை” யில் ஐ.நா. வின் இலங்கைத் தூதரக உயர் அதிகாரி ஷேனுகா செனவிரட்ண சாட்சியமளிக்கையில், சரத் பொன்சேகா பத்திரிகைக்கு அளித்த பேட்டி தொடர்பாக(சரணடைய வந்தவர்களை சுட்டுக் கொல்வதற்கான உத்தரவை வழங்கியமை) விளக்கம் கோரி ஐ.நா.வின் விசேட அறிக்கையாளரான பிலிப் அல்ஸ்ரன் 2009.12.18 ஆம் திகதி கடிதமொன்றை அனுப்பியிருந்ததாகவும், அதற்கான பதில் அனுப்பப்பட்டபோதும் பின்னர் அதில் காணப்பட்ட குறைபாடுகள், நிலைமைகளை விரிவாக ஆராய்ந்து பதிலளிக்க முடிவு செய்யப்பட்டமையால் அது வாபஸ் பெறப்பட்டதாகவும் கற்றுக்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிட்டதன் பின்னரே பதிலளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தொவித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கிடையில் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு சிங்கள உபவேந்தர் ஒருவரை நியமிக்க இருப்பது தொடர்பாக த.தே.கூ. உறுப்பினர் எஸ்.யோகேஸ்வர்ன அனுப்பிய கடிதத்திற்குப் பதிலளித்துள்ள உயர்கல்வி அமைச்சர், கிழக்கிலும், யாழ்ப்பாணத்திலும் உள்ள பல்கலைக்கழகங்களில் உபவேந்தராக தமிழரையே நியமிக்க வேண்டும் என்று எவ்விதச் சட்டமும் கிடையாது. அதே போன்று இலங்கையில் இன ரீதியான பல்கலைக்கழகங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார். ‘சிங்கள உபவேந்தர்” என அடையாளப்படுத்திப் பேசப்படும் ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளமை கவனத்தில் கொள்ள வேண்டியிருப்பதுடன், உயர்கல்வி அமைச்சரின் பதிலில் மேலாதிக்க உணர்வும் மேலோங்கி நிற்கிறதனையும் காணமுடிகிறது.
இதே வேளை, மட்டக்களப்பு கச்சேரிக்கு வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 17 பெரும்பாண்மையினத்தவர்களும் 4 மட்டக்களப்பு மாவட்டத்தவர்களும் சிற்றூழியர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறமையும் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இனநல்லுறவை ஏற்படுத்த ஜனாதிபதி மும்மொழிக் கொள்கையை பிரகடனப்படுத்தியிருக்கிற நிலைமையில் இவ்வாறான கசப்பான நிலைமைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.