இதற்கிடையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷணா யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத்தூதரகத்தை திறந்து வைப்பதற்காக எதிர்வரும் 27 ஆம் திகதி அங்கு வருகை தரவுள்ளார். அச்சமயம் அவர், வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 100 உழவு இயந்திரங்களை கையளிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்திய அரசினால் மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிவிக்கப்படும் இந்திய வீடமைப்புத் திட்டம் மற்றும் புiயிரதப் பாதை புனரமைப்புப் பணிகளையும் தொடக்கி வைப்பார் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.
இலங்கை – இந்தியக் கூட்டு ஆணைக்குழு மாநாட்டுக்காக இலங்கை வருகின்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் அம்பாந்தோட்டையிலும் இந்தியத் தூதரக கிளையை திறந்து வைக்கவுள்ளார்.
இதே வேளை, தூத்தக்குடிக்கும் கொழும்பிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவைகள் இன்னும் மூன்று மாதங்களில் ஆரம்பமாகுமென இந்திய – மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் வாசன் தெரிவித்திருக்கிறார். அத்துடன் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையே விமான சேவையை அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரிகள் மதுரை விமான நிலைய அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடாத்திவருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதற்கிடையில் இலங்கை – இந்திய கடல் எல்லையில் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெற்றவண்ணமுள்ளன. அண்மையில், இந்திய எல்லையில் சேது சமுத்திரத் திட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகம் ஆர்க்காட்டைச் சேர்ந்த 30 படகுகளில் இருந்த சுமார் 120 மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் சுற்றி வளைத்து தாக்கியுள்ளதாகவும், அவர்களின் படகுகளையும் சேதப்படுத்தியுள்ளதுடன், பிடித்த மீன்கள் மற்றும் மீன்பிடி வலைகளை கடலில் வீசியதாகவும் செய்தி வெளியாகியிருக்கிறது. இந்தத் தாக்குதலில் 15 மீனவர்கள் காயமடைந்ததாகவும், காயமடைந்த 4 பேர் வேதாரண்யம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, நிறைவேற்று ஜனாதிபதியாக இரண்டாவது பதவிக்காலத்திற்கு பதவிப்பிரமாணம் செய்து உரையாற்றுகையில் தனது வெளிநாட்டுக் கொள்கை ‘அணிசேராமை” எனத் தெரிவித்திருப்பதுடன், ‘எமக்கு பகை நாடுகள் என்று எதுவும் இல்லை. அந்த மாதிரியான குழுக்களையோ, அணிகளையோ நாம் கொண்டிருக்கவில்லை” எனத்தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் ‘இந்தியா செய்வதற்கு யாதொன்றும் இல்லை” என இந்தியத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.