இந்த நிலையில் இலங்கை அரசு வெற்றிகரமாகப் பயங்கரவாததை முடிவிற்குக் கொண்டுவந்ததைப் பாராட்டிய மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான அமெரிக்க அரச துறைச் செயலாளர் பிஸ்வால் தேசாய், நல்லிணக்கம் இலங்கையில் இன்னும் பிரச்சனைக்குரியதாகவே உள்ளது என்றார். ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய உரையில் அவர் மேலும் கூறியதாவது, நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டதும் இலங்கையுடன் மேலும் இராணுவ ஒத்துழைப்பை அமெரிக்க அரசு விரிவாக்க உள்ளது என்றார்.
இலங்கை அரசு தனது இராணுவத்தையும் கடற்படையையும் மேலும் விரிவாக்குவதற்கு பிரித்தானிய அரசு கடந்த வருடம் ஆயுதம் வழங்கும் அனுமதிப்பத்திரங்களை வழங்கியது.
இலங்கையிலிருந்து கண்டங்கள் தொலைவிலிருக்கும் அமெரிக்க அரசிற்கு இலங்கையில் இராணுவ அக்கறை ஏற்படக் காரணம் என்ன என்பது இங்கு அவதானிக்கப்பட வேண்டியதாகும்.
இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் மத்தியிலிருக்கும் அமெரிக்க இராணுவத் தளம் டியாகோ கார்சியாவில் அமைந்துள்ளது. இந்தியாவின் கன்னியாகுமாரியிலிருந்து 1790 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள டியாகோ கார்சியாவை அமெரிக்கா தங்குவதற்கான ஒப்பந்தம் 2016 ஆம் ஆண்டுடன் நிறைவிற்கு வருகிறது. இதன் பின்னர் தெற்காசியாவில் புதிய தளத்தை அமைப்பதற்கு இலங்கை பயன்படுத்தப்படலாம் என இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வியட்னாமில் நிலைகொண்டிருந்த அமெரிக்க இராணுவம் தாய்லாந்தில் பாலியல் தொழிலாளிகளை உருவாக்கும் கைங்கரியத்தை நிறைவேற்றியது, வெறுமனே கோரமான கொலைகளை மட்டுமல்ல அந்த பிராந்தியத்தின் கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை அழித்து மக்களைச் சூறையாடியது. இலங்கையில் போரை நிறைவடையச் செய்தற்காக மகிழ்ச்சி தெரிவிக்கும் இராணுவ அரசு முழு இலங்கையையும் அமெரிக்க இராணுவத்தின் கொலைக்களமாக மாற்ற முனைகிறது.