வன்னியில் சிவிலியன்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதனை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த வாரத்தில் இடம்பெற்ற எறிகணைத் தாக்குதல்களில் சிவிலியன்கள் காயமடைந்தும், கொல்லப்பட்டும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இம்மாதம் எட்டாம் திகதி இடம்பெற்ற எறிகணைத் தாக்குதல்களில் 296 பேர் காயமடைந்துள்ளதுடன் 47 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நம்பகத் தகுந்த வட்டாரங்களிலிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பௌர்ணமி தினமன்று மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் சுமார் 200 பேர் காயமடைந்ததுடன், 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வைத்தியசாலைகளுக்கு வெளியே கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தப் புள்ளிவிபரங்களில் உள்ளடக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பௌர்ணமி தினத்தன்று கால்நடைகளைக் கூட கொல்லக் கூடாதென சட்டம் அமுல்படுத்தப்படும் நாட்டில் அப்பாவி பொதுமக்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அப்பாவிச் சிவிலியன்களை மனித கேடயமாக பயன்படுத்தி வருவதாகவும், மோதல் தவிர்ப்பு வலயத்தில் மேற்கொள்ளப்படும் படையினரின் முன்நகர்வுகள் பெரும் சிவிலியன் சேதத்தை ஏற்படுத்தக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதுமத்தளான் பகுதியில் சுமார் 200,000 அப்பாவிச் சிவிலியன்கள் சிக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து சமூக நலக் கருத்துக்களை எதிர்பார்க்க முடியாது எனவும், அரசாங்கப் படையினர் சமூக நலனைக் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதி நேரத்தில் படையினர் இதுவரை காலமும் ஈட்டி வந்த நற் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயற்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாதென ஆனந்த சங்கரி அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
http://www.globaltamilnews.net/tamil_news.php?nid=8368&cat=1