அமெரிக்காவில் கறுப்பினத்தவரான பராக் ஒபாமா, ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதுபோல் என்றாவது ஒருநாள் இலங்கையில் ஜனாதிபதியாக தமிழ் அல்லது முஸ்லிம் இனத்தவர் தேர்ந்தெடுக்கப்படும் நிலை ஏற்படும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் பிளேக் தெரிவித்துள்ளார்.
கறுப்பினத்தை சேர்ந்தவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவை ஒன்றுபடுத்தியதைப்போன்று என்றாவது ஒருநாள் இலங்கையிலும் நிகழக்கூடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை கற்றுக் கொள்ளக்கூடிய பாடம் எது என வினாவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ளும் வகையில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற வைபவத்தின் போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இது அமெரிக்கர்கள் அனைவருக்குமே மிகவும் பெருமை தரும் தருணமாகும். ஏனெனில் இந்த வெற்றியானது ஜனநாயகத்தின் சக்தியை தெளிவாக காண்பித்துள்ளது.
அமெரிக்கா அனைவருக்கும் சரி சமமான சந்தர்ப்பங்களை வழங்கும் நாடு என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கறுப்பினத்தைச் சேர்ந்த இளம் மனிதர் முதற்தடவையாக செனற்றராக பதவி வகித்த பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் மூலமாக இது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
உலகம் எதிர்நோக்கியிருக்கும் பாரிய சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு உலக மக்கள் ஒன்றுபட வேண்டும் என்பதை அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அந்தச் சவால்களில் பொருளாதார நெருக்கடி பிரதானமானது அத்தோடு ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இடம்பெறும் இருபாரிய யுத்தங்கள் அது மட்டுமன்றி இன்னும் பல சவால்கள் உள்ளதென்பதை அவர் தெளிவாக எடுத்துணர்த்தியுள்ளார்.
ஒற்றுமை நம்பிக்கை மற்றும் இணைந்து பணியாற்றல் என்ற அவருடைய செய்தியையும் உலகம் வரவேற்றுப் போற்றுகின்றது என நான் நினைக்கின்றேன்.
பராக் ஒபாமா உலகம் முழுவதிலும் பிரபல்யம் மிக்கவராக திகழ்கின்றார். அந்த வகையில் உலக சவால்களை எதிர்கொள்வதற்கு இலங்கையுட்பட எமது நட்பு நாடுகளுடனும் பங்காளிகளுடனும் இணைந்து பணியாற்றுவதற்கு உரிய ஸ்தானத்தில் இருக்கின்றார் என நான் கருதுகின்றேன்.