Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையிலிருந்து வெளியேறி விட சரத் பொன்சேகா முடிவு?

 

இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதியும், தற்போதைய கூட்டுப் படைத் தளபதியுமான சரத் பொன்சேகாவுக்கும், அதிபர் ராஜபக்சேவுக்கும் இடையிலான கருத்து மோதல்கள் முற்றி விட்டதனால் நாட்டை விட்டு வெளியேறி விட பொன்சேகா முடிவு செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ராணுவம் வெற்றி பெற்ற பின்னர் சரத் பொன்சேகாவுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து ராஜபக்சே , அவரை அப்படியே விட்டால் தனக்கு சிக்கலாகி விடும் என்று பயந்த அவர் ராணுவத் தளபதி பதவியில் இருந்து பொன்சேகாவை நீக்கினார். அவருக்கு அளித்து வரப்பட்ட பாதுகாப்பையும் குறைத்தார் என்று செய்திகள் வெளியாகின.

அண்ணன் இப்படி என்றால் தம்பி கோத்தபாய ராஜபக்சேவோ, பொன்சேகாவின் அறிக்கைகளைப் வெளியிடக் கூடாது, அவர் தொடர்பான புகைப்படங்கள், கட்டுரைகளை அரசு சார்பு ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்று தடை போட்டுள்ளார்.

இதனால் பொன்சேகா கடும் அதிருப்தி அடைந்துள்ளாராம். ராஜபக்சே தன்னை அவமரியாதைப்படுத்தும் வகையில் நடத்துவதாக கருதும் அவர் தனது பாதுகாப்பை கருத்தில் கொண்டு அமெரிக்காவில் போய் செட்டிலாகி விட தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து புத்த மத பிக்குகள் குழு ஒன்று பொன்சேகாவைப் பார்த்து அவரை சமாதானப்படுத்தியுள்ளனவாம்.

சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு ராஜபக்சேவிடம் தாம் எடுத்துக் கூறுவதாகவும் பிக்குகள் குழு உறுதியளித்துள்ளதாம்.

பொன்சேகாவும், கோத்தபாய ராஜபக்சேவும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் என்பது நினைவிருக்கலாம்.

Exit mobile version