Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையிலிருந்து தமிழ் பேசுவோரை அகதிகளாக ஏற்றதற்காக கனடா வருத்தப்படும்:கனடாவிலுள்ள இலங்கைத் தூதுவர்.

 இலங்கையிலிருந்து தமிழ் பேசுவோரை அகதிகளாக ஏற்றுக்கொண்டதற்காக கனடா கவலைப்படும் என்று அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் தயா பெரேரா கூறியுள்ளார்.ஆங்கிலப் பத்திரிகையொன்றின் இணையத்தள சேவைக்கு வழங்கிய பேட்டியின் போதே தயா பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து 2006 இற்கு முன் அகதிகளாக சென்றோரை கனடா உள்ளீர்த்தமை அந்த நாட்டின் எதிர்கால பொதுத் தேர்தலில் முக்கியமான காரணியாக தோற்றம் பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளை பேணிக்காப்பவர்கள் என்ற பெருமையை கனடா எடுத்துக் கொண்டுள்ளது. இதனால் அகதிகளாக வருவோரில் பெருந்தொகையானோருக்கு அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது. கனடா புலிகளை ஊக்குவிக்கவோ அல்லது தாபரிக்கவோ இல்லை. 2006 இல் புலிகளை தடை செய்திருந்தது.

2008 ஜூனில் உலகத் தமிழர் இயக்கத்தை தடை செய்திருந்தது என்றும் தயா பெரேரா கூறியுள்ளார்.

இதேவேளை, கே.பி. அல்லது குமரன் பத்மநாதன் கைது தொடர்பாக கனடாவில் பகிரங்கமான எதிரொலி காணப்படவில்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார். தமிழ் பேசும் புலம்பெயர் சமூகத்தினர் மத்தியில் செல்வாக்குடையவராக கே.பி. தோன்றவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணமடைந்ததை கே.பி. ஏற்றுக்கொண்டிருந்தார். அதனால், கனடாவில் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்வோரின் வருவாய் குறைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. அதேசமயம், மோதலின் இறுதிக்கட்டங்களில் மனிதக் கேடயங்களாக பிரபாகரன் பயன்படுத்தியது குறித்து புலம்பெயர் சமூகத்தின் மத்தியிலிருந்து கண்டனம் தெரிவித்து ஒரு வார்த்தைதானும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்று தயா பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இடம்பெயர்ந்த மக்கள் நடத்தப்படும் விதம் குறித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதாகவும் ஏனென்றால் தொடர்ந்து பணம் திரட்ட ஆர்ப்பாட்டங்களுக்கான சில அடிப்படைத் தேவை அவர்களுக்கு உள்ளதாகவும் தயா பெரேரா கூறியுள்ளார்.

 

 

Exit mobile version