எனவே, தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் புதிய அரசியல் அமைப்பையும் இந்தியா உடனான இணக்கப்பாட்டையும் தேர்தலுக்கு முன் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்” என தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தபர அமில தேரர் தெரிவித்தார்.
தேசிய பிக்கு முன்னணியின் விஷேட செய்தியாளர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை தேசிய நூலகத்தில் நடைபெற்றது. இதன் போதே தபர அமில தேரர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
“பிரிவினைவாதத்தின் ஆயுதப் போராளிகள் இராணுவ நடவடிக்கைகள் மூலம் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இன்னும் இலங்கையில் பிரிவினைவாத சக்திகளின் செயற்பாடுகள் முழு அளவில் தோற்கடிக்கப்படவில்லை என நாம் பல முறை வலியுறுத்தியிருந்தோம்.
ஆனால் யுத்த வெற்றியின் மயக்கத்தில் இருந்த பொது மக்களும் அரசியல் தலைவர்களும் எமது கூற்றின் மீது கவனம் செலுத்தவில்லை.
இலங்கையில் காணப்பட்ட சிறு பிரச்சினைகளை அவதானக் குறைவாக அரசாங்கம் செயற்பட்டமையால் இன்று அவை அபாயகரமானவையாக தலைதூக்கியுள்ளன. இதனால், இந்தியா தனது பொருளாதார அரசியல் கேந்திர நிலையமாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை வைத்துக் கொள்ள முயற்சி செய்கின்றது.
நிருபமாராவின் வருகையின் பின்னணியும் இதுதான். இலங்கையில் யுத்தம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும்போது சர்வதேசத்திற்கு பல உறுதிமொழிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கியிருந்தார்.
அவற்றை நிறைவேற்ற தவறியதாலேயே இந்தியா, ஐ.நா. மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன பல அழுத்தங்களை கொடுத்துள்ளன.
இரட்டை வேடம் போடுவதில் அரசாங்கம் தனது கெட்டித்தனத்தை காட்டியுள்ளது. ஜீ.எஸ்.பி. எங்களுக்கு வேண்டாம் என்று பிரித்தானிய தூதரகம் முன்பு ஒரு குழுவை களமிறக்கி ஆர்ப்பாட்டம் செய்யும் அதேவேளை, திறைச்சேரி செயலாளரை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்பி ஜீ.எஸ்.பி.க்காக கையேந்தி நிற்கிறது.
இலங்கை அரசாங்கத்தின் ஐ.நா.வுடனான உறவும் அதே போன்றுதான் இலங்கை சிங்கள, தமிழ் மக்களுக்கு ஒரு முகத்தையும் சர்வதேசத்திற்கு மற்றுமொரு முகத்தையும் காட்டி வருகின்றது” என்றார்.