குறித்த கருத்தரங்களில் பங்கேற்க வேண்டாம் என 50 நாடுகளிடம் மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது.
பயங்கரவாத இல்லாதொழிப்பு தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் நடைபெறும் கருத்தரங்களில் பங்கேற்குமாறு இலங்கை அரசாங்கம் 54 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் மே மாதம் 31ம் திகதி முதல் ஜூன் மாதம் 2ம் திகதி வரையில் கொழும்பில் இந்த மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அழைப்பு விடுக்கப்பட்ட சில முக்கிய நாடுகள் கருத்தரங்களில் கலந்து கொள்ளப் போவதில்லை என ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் அறிவித்துள்ளது.
பொதுமக்களை படுகொலை செய்த ஓர் யுத்த வெற்றி தொடர்பான கருத்தரங்களில் பங்கேற்க வேண்டாம் என மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால், பயங்கரவாத தடுப்பு நிபுணர் ரொஹான் குணரட்ன மற்றும் சிரேஸ்ட படையதிகாரிகள் இந்த கருத்தரங்களில் விசேட உரை நிகழ்த்த திட்டமிட்டுள்ளனர்.
சர்வதேச பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு இலங்கையின் யுத்த தந்திரோபயங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும், இந்தக் கருத்தரங்கில் பயங்கரவாத ஒழிப்பு குறித்து விளக்கமளிக்கப்பட உள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் இணைய தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
எனினும், அரசாங்கத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட யுத்தம் சட்டவிரோதமானது என மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசியல் தீர்வு; திட்டம் வழங்குவதாக அரசாங்கம் நீண்ட காலமாக வாக்குறுதி அளித்து வருகின்ற போதிலும் இதுவரையில் தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற போதிலும், அதற்காக அப்பாவி பொதுமக்கள் மீது அரசாங்கம் தாக்குதல் நடத்த அனுமதிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.