இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக விவாதிக்க அழைக்கப்பட்டுள்ள சிறப்பு கூட்டத்தின் நோக்கமும் பயனும் குறித்து தமக்கு கடுமையான தயக்கங்கள் இருப்பதாக இந்தியா கூறியுள்ளது.
இலங்கையில் நீண்ட காலமாக நடைபெற்று வந்த மோதலை தற்போது இலங்கை முடிவுக்கு கொண்டுவந்த நிலையில், அங்கு அனைத்து சமூகங்களுக்கும் இடையே ஒரு நல்லிணக்கத்தையும் ஒற்றுமை உணர்வும் ஏற்படடும் வகையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே சர்வதேச சமூகத்தின் செயலாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இப்படியாக ஒரு சிறப்பு அமர்வை திணிப்பதன் மூலம், சில உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு செய்யக் கூடியப் பணிகளை அரசியலாக்கி விட்டார்கள் என்றும் இந்தியத் தூதர் கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் இன்னும் ஒரு வாரத்தில் இந்த ஆணைக்குழுவின் வழக்கமான கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்துக்கான தற்போதைய தேவை குறித்தும் இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.
எனினும் இந்தக் கூட்டத்துக்கான அழைப்பை விடுத்த சுவிட்சர்லாந்து நாட்டின் தூதர், இலங்கை அரசு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.
ஐ நா வின் மனித உரிமை ஆணைக்குழுவின் சிறப்பு கூட்டத்தில் உரையாற்றிய சுவிஸ் நாட்டின் பிரதிநிதி, இடம் பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களில் உள்ளவர்களுக்கு உதவும் வகையில், அங்கு சென்று பணியாற்ற உதவி அமைப்புகளுக்கு தங்கு தடையின்ற அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
மேலும் முகாம்களில் உள்ள மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதும், மதிக்கப்பட வேண்டியதும் அவசியமானது என்றும் சுவிஸ் நாட்டின் பிரதிநிதி கருத்து வெளியிட்டுள்ளார். அங்குள்ளவர்களுக்கு சுதந்திரமாக நடமாடுவது உட்பட அனைத்து சுதந்திரங்களும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வேண்டியுள்ளார்.
மேலும் இடம் பெயர்ந்த நிலையிலுள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசிதிகளையும் இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சுவிஸ் நாட்டின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.