இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை, சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான தரமான அடையாளமாக கருத முடியும் என முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். நேற்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைய அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தினை வெளியிட்டார். அண்மைக்காலமாக, இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை பேணுதல் தொடர்பான விடயங்கள் குறித்து சில நாடுகள், அவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பாக ஜெனீவாவில் இடம்பெறவுள்ள அமர்விற்கு முன்னோடியாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. சர்வதேச மனித உரிமைகள் தரம் மற்றும் குறிக்கோளை நோக்கிய பயணத்தில் உரிய பாதைக்கு தற்போது இலங்கை வந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்திற்கு முன்னதாக, ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வருவார் என எதிர்பார்ப்பதாகவும், முன்னாள் சட்டமா அதிபர் மொஹன் பீரிஸ் தெரிவித்தார். இதேவேளை, வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இன்று மாலை அமர்வில் உரையாற்றுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.