இலங்கை அரசாங்கம் சமர்ப்பித்துள்ள 2011ம் வருடத்துக்கான
வரவு-செலவுத்திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு எதுவிதமான நன்மைகளும் கிட்டப்போவதில்லை என்று சுட்டிக் காட்டுகின்றனர்.
சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் வயோதிபர்களுக்கான தாபரிப்புத் தொகை என்பவற்றை அதிகரிப்பதாக வரவு செலவுத்திட்ட உரையில் ஜனாதிபதி தெரிவித்திருந்த போதும் அதன் சதவீதம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
வரவு செலவுத்திட்டத்தின் ஒரேயொரு நன்மை தொலைபேசி அழைப்புக் கட்டண குறைப்புத்தான். அது கூட சாதாரண பொதுமக்களை சென்றடையாது. ஏனெனில் உள்நாட்டு அழைப்புகளுக்கான ஐம்பது சத தள்ளுபடி நிலையான தொலைபேசிகளுக்கு மட்டுமே பொருந்தும். ஆயினும் இலங்கையில் தற்போது நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரும்பாலும் கைத்தொலைபேசிகளையே பயன்படுத்துகின்றனர்.
வர்த்தக மற்றும் தனியார் நிறுவனங்கள் தான் அதிகளவில் நிலையான தொலைபேசி இணைப்புக்களைப் பயன்படுத்துகின்றனர்.அதன் காரணமாக அந்தச் சலுகையால் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு எந்த இலாபமும் இல்லை..
இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் மூலமாக அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு வெறும் 600 தொடக்கம் 900 ரூபா வரைதான் . அத்துடன் வாழ்க்கைச்
செலவுப்புள்ளியையும் சேர்த்தால் கூட மிஞ்சி மிஞ்சிப் போனால் ஆயிரத்து ஐநூறு தான் அதிகரிக்கும்.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வானளாவ அதிகரித்துள்ள நிலையில் இந்த சம்பள அதிகரிப்பு எந்த வகையிலும் போதுமானதல்ல. அதே நேரம் ரூ. 2500 சம்பள அதிகரிப்பு வழங்கும் ஜனாதிபதித் தேர்தல் கால வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.
வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புக் கட்டண அதிகரிப்பானது கூட ஏழை மக்களின் வயிற்றில் தான் அடிக்கவுள்ளது. ஏனெனில் வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புகளை எடுப்பவர்கள் பெரும்பாலும் அவர்கள் தான். மத்திய கிழக்கு போன்ற நாடுகளில்
பணிபுரியும் தமது உறவினர்களுக்கு இனி மேல் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தான் அவர்கள் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ள நேரிடும்..
சாதாரண மற்றும் நடுத்தர மக்களை இவ்வாறு வாட்டி வதைத்திருக்கும் அரசாங்கம் மறுபுறத்தில் தனவந்த வர்த்தகர்களுக்கு வரிச் சலுகை, சுங்கத்தீர்வை தள்ளுபடி என
பல சலுகைகளை வழங்கியுள்ளது.
அந்த வகையில் ஜனாதிபதியின் முதலாவது ஐந்தாண்டில் இலங்கையர்களை ஏழ்மை நிலைக்குத் தள்ளியதை விட ஆச்சரியமாக ஏதும் நிகழ்ந்து விடவில்லை என்று ஐ.தே.க. சுமத்தும் குற்றச்சாட்டுகள் உண்மை போன்றே தென்படுகின்றன.