Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கையின் அனைத்து இராணுவத் தேவைகளையும் பாகிஸ்தான் பூர்த்திசெய்து வருகிறது:பாகிஸ்தான் பிரதமர்.

07.08.2008.
இலங்கையே பாகிஸ்தானிடமிருந்து பாரிய இராணுவ உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் நாடென பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் வருடாந்தம் 250 முதல் 300 இலங்கை இராணுவத்தினருக்கு இலவச பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இலங்கைக்கும்-பாகிஸ்தானுக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் தொடர்ந்தும் காணப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இலங்கைக்கு இராணுவ ரீதியாக மாத்திரமன்றி அனைத்து வழிகளிலும் உதவிகளை வழங்க தமது நாடு தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார்.

இலவச இராணுவப் பயிற்சிகளை வருடாந்தம் வழங்குவதைத் தவிர இலங்கையின் அனைத்து இராணுவத் தளபாடத் தேவைகளையும் பாகிஸ்தான் பூர்த்திசெய்து வருவதாக கிலானி தனது செவ்வியில் சுட்டிக்காட்டியிருந்தார்.

பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளிடமிருந்து இலங்கை இராணுவத் தளபாடங்களை கொள்வனவு செய்கின்றமை தொடர்பாக இந்தியா அதிருப்தி வெளியிட்டிருந்ததே, இது தொடர்பான உங்கள் நிலைப்பாடு என்னவென அந்த ஊடகம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பாகிஸ்தான் பிரதமர்,

“இலங்கை ஒரு இறைமை உள்ள நாடு. எனவே, இறைமை உள்ளநாடு என்ற வகையில் இலங்கையே தனக்கு எது பொருத்தமானது என்பதைத் தீர்மானிக்கவேண்டும். இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் ஒருநாட்டின் உள்விவகாரத்தில் மற்றநாடு தலையிடுவதில்லையென்ற பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையிலேயே இலங்கைக்கும்-பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் தொடர்கின்றன” என்று கூறியிருந்தார்.

சர்வதேச ரீதியில் பயங்கரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் முக்கிய பங்காற்றிவருவதாகக் குறிப்பிட்ட அவர், பாகிஸ்தான் மீதான அக்கறையிலேயே பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பாகிஸ்தான் உதவிவருவதாகக் கூறினார்.

Exit mobile version