17.12.2008.
கொசோவோவில் அகதிகள் அந்தஸ்து கோரி இலங்கையரும் விண்ணப்பித்திருப்பதுடன் ஆபிரிக்கா, ஆசியாவிலிருந்து அதிக எண்ணிக்கையில் புகலிடம் கோரி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக குடியேற்ற ,வெளிநாட்டவர்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பான பொலிஸ் பணிப்பாளர் மேஜர் ரெப்சி மொரினா அறிவித்திருக்கிறார்.
கொசோவோ பொலிஸாரின் செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த ரெப்சி மொரினா கமரூன், மற்றும் இலங்கையிலிருந்து 23 பேர் அகதிகள் அந்தஸ்தை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.அத்துடன் ஏனைய நாடுகளை சேர்ந்தவர்களும் கோரிக்கை விடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
20052008 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தற்காலிக அடையாளஅட்டைக்காக கொசோவோவில் 6,626 வெளிநாட்டவர்கள் விண்ணப்பித்திருந்ததாகவும் இவர்களில் பெரும்பான்மையானவர்கள் துருக்கியை சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.1,487 பேர் துருக்கியை சேர்ந்தவர்களாகும் . மேலும் 705 அல்பேனியர்களும் ,582 சீனர்களும் ,490 மசிடோனியர்களும் தற்காலிக அடையாள அட்டைக்காக விண்ணப்பித்துள்ளனர்.இந்த தற்காலிக அடையாள அட்டையுடன் 90 நாட்கள் கொசோவோவில் தங்கியிருக்க முடியும்.
90 நாட்கள் முடிவடைவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டவர்கள் குடியேற்ற, வெளிநாட்டவர் விவகாரங்களுக்கு பொறுப்பான அலுவலகத்திற்கு தம்மை பதிவு செய்யவேண்டும். மாணவராக அல்லது தற்காலிக பணியாளராக தொடர்ந்திருக்க அனுமதிபெறவேண்டும். சட்டவிதிகளை மீறினால் குற்றச்சாட்டு தொடுக்கப்படும்.
கொசோவோ குடியரசின் பாராளுமன்றம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை குடிவரவு வெளிநாட்டவர்கள் சட்டமூலத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. விரைவில் இச்சட்ட மூலத்திற்கு ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கவுள்ளார்.