புலிகள் அமைப்பிலிருந்த ஆயிரக்கணக்கான போராளிகள் தமது வாழ்வை விட்டில் பூச்சிகள் போல மக்களுக்காக அழித்துக்கொண்டார்கள். புலிகளின் தலைவர்களாகத் தம்மை நியமித்துக்கொண்டவர்கள் சுய நிர்ணைய உரிமைக்கான மக்களின் போராட்டத்தையே அழித்து இலங்கைப் பேரினவாத அரசின் அடிவருடிகளாக மாற்றமடைந்துள்ளனர்.
மேற்கு நாடுகளின் கொலைகார அரசுகளோடும், இந்திய அரசியல் பிழைப்புவாதிகளோடும் இணைந்து ஆரம்பித்த அதிகாரவர்க்க அரசியல் இன்று பேரினவாதிகளின் காலடியில் சமர்ப்பிக்கபடுகின்றது.
ஒரு பகுதிப் புலித் தலைமைகள் தேசியம் என்ற பெயரில் தமது வியாபாரத்தை கோலாகலமாக நடத்துகின்றனர். புலம்பெயர் நாடுகளில் புலிகள் வாழ்கிறார்கள் என்று பேரினவாதம் தனது அரசியலை நடத்துவதற்கு எல்லா உதவிகளையும் செய்கின்றனர். இவர்கள் இனக்கொலையாளிகளின் மறைமுகமான முகவர்கள்.
இதன் மறு பக்கத்தில் இன்னொரு புலித் தலைவர்கள் கூட்டம் இலங்கைப் பேரினவாத அரசுடன் எந்தக் கூச்சமுமின்றி நேரடியாக உறவு கொண்டாட ஆரம்பித்துவிட்டது.
இலங்கை அரசின் அடியாளாக மாறிப்போன கே.பி இல் ஆரம்பித்து பொதுவாக பெரும்பாலான புலிகளின் தலைமைகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கை அரசின் தொங்கு தசைகளாகச் செயற்படுகின்றனர்.
முன்னை நாள் புலிகள் புலம்பெயர் முக்கிய உறுப்பினரான அமிர்த்தலிங்கம் விமலதாசன் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரித்தானியக் கிளையின் உபதலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கிளையின் அங்குரார்பண நிகழ்வில் முன்னைனாள் புலம்பெயர் புலிகளின் முக்கியஸ்தர்களின் தலைகளைக் காணக்கூடியதாகவுள்ளது.
அமிர்த்தலிங்கம் விமலதாசன் புலிகளுக்கு ஆதரவாக கிங்ஸ்டன் தமிழ்ப் பாடசாலை நடைபெறவில்லை எனக் காரணம் காட்டி அதற்கு அருகாமையில் புதிய தமிழ்ப் பள்ளி ஒன்றை ஆரம்பித்தவர். தீவிர புலி ஆதரவாளரான இவர் பிரபாகானை நேரில் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டவர். புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் கே.பியை சந்தித்த முதல் குழுவில் இணைந்து இலங்கை சென்றவர். கே.பி மலேசியாவில் சரணடைந்த போது அவருடனிருந்த நடேசனின் சகோதரருடன் இணைந்த பள்ளிக்கூட வியாபாரம் நடத்திவருகிறார்.
தலைமச் செயலகத்துடன் இணைந்து செயற்பட்ட விமலதாசன் இன்று சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரித்தானியக் கிளையின் உப தலைவர்.
விமலதாசனுடன் நிழல்படத்தில் காணப்படும் ஏனைவர்கள் கே.பி உடன் நேரடித் தொடர்பிலுள்ள முன்னை நாள் புலம்பெயர் புலிப் பிரமுகர்கள். மைத்திரிபால அரசில் கே,பி இன்னும் சுதந்திரமாக உலா வருதற்கான காரணம் இப்போது தெளிவாகியுள்ளது. கே.பி தனது புலம்பெயர் சகாக்களை மைத்திரி குழுவோடு இணைத்துள்ளார்.
அதிகாரவர்க்கத்தின் ஒட்டுண்ணியான கே.பி போன்றவர்களால் அரசியலால் அழிந்துபோனவர்களின் உணர்வு மீட்சி பெறும் போது பேரினவாதத்தின் தொங்குதசைகள் அறுத்தெறியப்படும்.