சென்னை புழல் காவாங்கரை பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் குடும்பபம் பெண்ணொருவர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
அகதி முகாமில் வசித்து வரும் கஜேந்திரன் ரம்யா (வயது 21) என்ற .ளம் குடும்பப்பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சமையல் செய்வதற்காக மண்ணெண்ணை அடுப்பை பற்றவைத்த போது எதிர்பாராதவிதமாக ரம்யா மீது தீ பரவியது. தீயில் கருகிய அவரை மீட்டு, மாதவரம் அருகே உள்ள ரெட்டேரியில் ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையே இறந்த ரம்யாவின் உறவினர்கள், வைத்தியசாலையில் சரியாக சிகிச்சை அளிக்காததால் அவர் இறந்துவிட்டதாக கூறி, உடலை வாங்க மறுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு புழல் பொலிஸார் விரைந்து சென்று அவர்களை சமாதானம் செய்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புழல் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.