இலங்கைப் பிரச்சினை குறித்த இந்திய மத்திய அரசாங்கததின் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மூன்று தசாப்த காலங்களாக நீடித்து வரும் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டுமென இந்தியா நேற்றைய தினம் கோரிக்கை விடுத்துள்ளது.
இராணுவ ரீதியான அணுகுமுறையின் மூலம் ஒருபோதும் தீர்வு காண முடியாதென இந்திய பதில் பிரதமர் பிரணாப் முகர்ஜீ தெரிவித்துள்ளார்.
இலங்கை அரச படையினரால் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைளில் இந்தியா தலையீடு செய்யாதென பிரணாப் முகர்ஜீ பாராளுமன்றத்தில் தெரிவித்து 72 மணித்தியாலங்கள் கழியாத நிலையில் மாறுபட்ட கருத்தை அவரே முன்வைத்துள்ளார்.
தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் சமூகத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக முகர்ஜீ தெரிவித்திருந்தார்.
நேற்று முன்தினம் இரவு தலைநகர் கொழும்பில் புலிகளினால் வான் தற்கொலைப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா தனது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றிக் கொண்டுள்ளது.
இலங்கைப் பிரச்சினைக்கு சமாதான பேச்சுவார்த்தைகளின் மூலமே தீர்வு காண முடியும் என பதில் பிரதமர் முகர்ஜீ மேற்கு வங்காளத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்த தமிழக ஆதரவு அலை நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் நிலையில் இந்திய மத்திய அரசு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் பிரணாப் முகர்ஜீ கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் அரசியல் ரீதியான தீர்வு எட்டப்பட வேண்டும் என்பது குறித்து இந்த விஜயத்தின் போது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுக்கக் கூடும் என அரசியல் விமர்சகர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
http://www.globaltamilnews.net