இலங்கையில் போர் நிறுத்தத்தை உடனடியாக மத்திய அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்துக் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இலங்கையில் தமிழர் படுகொலையை கண்டித்தும், உடனடியாக போர் நிறுத்தம் செய்ய மத்திய – மாநில அரசுகள் வலியுறுத்தக்கோரியும் நவம்பர் 25ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி இன்று தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். தஞ்சையில் நடந்த ரயில் மறியலில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன் தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோட்டில் தபால் நிலையம் நோக்கி 300க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணியாக சென்றனர். மாவட்ட காவல்துறை அலுவலகம் அருகே பேரணி வந்தபோது அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
மறியல் போராட்டத்தின் போது, இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோஷங்கம் எழுப்பப்பட்டது. மேலும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராவும் கோஷங்கள் எழுப்பினர்.