Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கைத் தூதரகத்தின் வாயிலில் ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலித்தது!

17.01.2009.

Who killed Lasantha? Mahinda Rajaparksa’s government killed Lasantha’ –  ‘யார் லசந்தாவைக் கொன்றது? மகிந்த அரசே கொன்றது’ என்று இலங்கைத் தூதரகத்தின் முன்னால் ஓங்கி ஒலிக்கப்பட்டது. சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையைக் கண்டித்து ஜனவரி 16 மாலை 4:30 மணிக்கு இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக  இடம்பெற்ற கண்டனப் போராட்டத்திலேயே இலங்கை அரசின் மீதான கடுமையான கண்டனம் ஓங்கி ஒலிக்கப்பட்டது. இக்கண்டனப் போராட்டத்தை தேசம்நெற்இ கொமிற்றி போர் வேக்கர்ஸ் இன்ரநசனல்இ எக்சைல் ஜேர்னலிஸ்ட் நெற்வேர்க் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. ஜனவரி 15 பிரித்தானியப் பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் கண்டனப் போராட்டம் ஒன்றை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. இப்போராட்டத்திற்கும் தேசம்நெற் தனது முழுமையான ஆதரவை வழங்கி இருந்தது தெரிந்ததே.

சண்டே லீடர் அசிரியர் லசந்த விக்கிரமதுங்கா உட்பட இலங்கையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பாக சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்! ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்! யுத்தம் நிறுத்தப்பட வேண்டும்! தமிழ் சிங்கள் முஸ்லிம் மலையக மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும்! சாதாரண மக்களும் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் வகையில் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்! ஏனைய சிறுபான்மை இனங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கிகரிக்கப்பட வேண்டும்! என்பவற்றை முன் வைத்து இப்போராட்டம் நடாத்தப்பட்டது. இக்கண்டனப் போராட்டத்தில் தமிழர்கள் அல்லாத பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் கலந்துகொண்டு இலங்கை அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான தங்கள் குரல்களை ஓங்கி ஒலித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இனங்களுக்கு இடையேயான நீதிக்கும் சமத்துவத்திற்குமான அமைப்பினரும் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை வழங்கி இருந்தனர். ‘நாங்கள் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் லண்டன் விஜயத்தைக் கண்டித்து இடம்பெற்ற போராட்டத்திற்கு தயாரிக்கப்பட்ட பதாகைகளை இப்போராட்டத்திற்கும் எடுத்து வந்தோம். அன்றும் சரி இன்றும் சரி மகிந்த அரசு தனது பாசிசப் போக்கிலேயே சென்று கொண்டிருக்கிறது’ என்று அவ்வமைப்பின் உறுப்பினர் சபா நாவலன் தெரிவித்தார். ‘ஆறு மாதங்களுக்கு முன் அந்த வசனங்களை எழுதும் போதிருந்த மகிந்த அரசின் ஒடுக்குமுறைகள் இன்னும் இன்னும் மிகுதியாகிச் சென்று இன்று லசந்த போன்றவர்களின் கொலைகளில் முடிந்து உள்ளது என்று தெரிவித்தார் சபா நாவலன்.

இக் கண்டன போராட்டத்தில் ரி பி சி பணிப்பாளர் ராம்ராஐ,தமிழ் ஜனநாயக காங்கிரஸ் ஐயதேவன், சிறீலங்கா முஸ்லீம் போறம் நஐ முகமட் , மசுரா, தமிழ் தகவல் நடுவம் வரதகுமார் , சொலிடாரிற்றி போர் பீஸ் சாள்ஸ், மற்றும் எஸ் . எல் .டி. எப்  முதலானோர் கலந்துகொண்டனர்.

 அங்கு வந்திருந்த எஸ்எல்டிஎப் முக்கியஸ்தர் ஒருவர் கொமிற்றி போர் வேக்கர்ஸ் இன்ரநசனலின் பனரை கழற்றி அநாகரீமாகச் செயற்பட்டதாக கொமிற்றி போர் வேக்கர்ஸ் இன்ரநசனல் அமைப்பின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதனை சொலிடாரிற்றி போர் பீஸ் அமைப்பின் ஆதரவாளர் ஒருவரும் உறுதிப்படுத்தினார்.

‘Stop! War on Journalists’ என்ற பிரசுரமும் அங்கு விநியோகிக்கப்பட்டது. எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு, சுயாதீன ஊடக இயக்கம், சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம், எக்சைல் ஜேர்னலிஸ்ட் நெற்வேக் ஆகிய அமைப்புகள் இப்பிரசுரத்தை வெளியிட்டு இருந்தன.

   ஜெயபாலன்

Exit mobile version