Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கைத் துணை உயர் ஸ்தானிகராலயத்தை முற்றுகையிட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது!

7/30/2008
தமிழக மீனவர்களை இலங்கை ராணுவத்தினர் தொடர்ந்து படுகொலை செய்து வருவதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் துணை உயர் ஸ்தானிகராலயம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட போது அதன் தேசியச் செயலாளர் டி. ராஜா உள்ளிட்டோர்களை பொலீசார் கைது செய்தனர்.

தமிழக மீனவர்களை இலங்கை ராணுவத்தினர் தொடர்ந்து படுகொலை செய்து வருவதைக் கண்டித்தும், இதுபோன்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திடக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று காலை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு முன்பாக அருகில் இருந்த மியூசிக் அகாதெமி என்ற இடத்திலிருந்து பேரணி புறப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு அக்கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா, தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் மற்றும் அக்கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டு குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு ஆகியோர் தலைமையேற்றனர்.

முற்றுகைப் போராட்டத்திற்கு பொலீசார் அனுமதிக்காததால் துணை ஸ்தானிகராலயத்திற்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இப்போராட்டத்தில் வை. சிவபுண்ணியம், பத்மாவதி, கே. உலகநாதன், ராஜசேகரன் உள்ளிட்ட தமிழக சட்டமன்ற உறுப்பினர்களும் துணைச் செயலாளர்களான சி. மகேந்திரன் மற்றும் ஜி. பழனிச்சாமி ஆகியோருடன் ஏராளமான தொண்டர்களும் ஈடுபட்டனர்.

Exit mobile version