இளந்தமிழர் இயக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் அருணபாரதி இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
இலங்கை நாட்டின் உள்நாட்டுப் போர் காரணமாக அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ள ஈழ அகதிகள், தமிழகம் முழுவதிலுமுள்ள 117 முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா.வின் அகதிகளுக்கான நடைமுறை விதிகளின்படி நடத்தாமல், கைதிகள் போல முகாம்களில் இவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று தனது மனுவில் அருணபாரதி கூறியுள்ளார்.
எந்த ஒரு முகாமிலும் அவர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை, மோசமான சூழலிலேயே அவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அப்படி அவர்களை அடைத்து வைத்திருப்பது இந்திய அரசமைப்பின் 14 மற்றும் 21 பிரிவுகளுக்கு எதிரானதாகும் என்றும், சட்டப்படி தங்களைப் பதிவு செய்த பின்னரும் அவர்களை சுதந்திரமாக வாழ அனுமதிக்காமல், கைதிகளைப் போல நடத்தப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவில் பர்மா, திபெத் அகதிகள் கூட உள்ளனர். ஆனால் அவர்களுக்கு எல்லா வசதிகளும் உள்ளது. முறையாக நடத்தப்படுகின்றனர். ஆனால் ஈழத் தமிழ் அகதிகள் மட்டும் பயங்கரவாதிகளாக சித்தரித்து மத்திய, மாநில அரசுகள் நடத்துகின்றன என்று அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
எவ்வித வழக்குகளும் இன்றி சந்தேகத்தின் பேரில் பல ஈழத்தமிழர்களை செங்கல்பட்டு மற்றும் பூவிருந்தவல்லி முகாம்களில் அடைத்து வைத்துள்ளனர். இவர்கள் மீது எந்த குற்றமும் சாற்றப்படவில்லை, வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் சட்டத்திற்குப் புறம்பாக அடைத்து வைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு சட்ட நிவாரணம் பெறவும் வழியில்லாத நிலை உள்ளதென அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள ஈழ அகதிகள் முகாம்களின் நிலை குறித்து ஆய்வு செய்த மனித உரிமை அமைப்புகள், கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள், தமிழக சட்டப் பேரவை உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் வெளியிட்ட அறிக்கைகள் இம்மனுவுடன் இணைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது.