Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கைத் தமிழர்கள் தங்கள் உரிமைகளைக் கோரும் முயற்சிகளில் அவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை:கருணாநிதி

02.11.2008

இலங்கைத் தமிழர்கள் தங்கள் உரிமைகளைக் கோரும் முயற்சிகளில், அவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாததன் காரணமாக அம்மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியது, இடையில் ஏற்பட்ட சில விரும்பத்தகாத நிகழ்வுகளின் காரணமாக தமிழ்நாட்டு மக்கள் தங்கள் ஆதரவைக்காட்டுவதிலும் வேகம் குறைந்தது, அந்த நிலையில் தமிழ் நாட்டோர் அனைவரும் ஒற்றுமையுடன் இலங்கைத் தமிழர் நலனுக்காக ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் எடுத்த முயற்சிகளுக்கும் முழுமையான பலன் கிடைக்கவில்லையென்று  தமிழக முதல்வர் கருணாநிதி கூறி இருக்கிறார்.  இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு அதற்குள்ள அதிகாரங்கள் அடிப்படையில்தான் இயங்கவேண்டியிருக்கிறது என்றும், இன்னொரு நாட்டுப் பிரச்சினையில் பக்கத்து நாடு ஓரளவிற்குத்தான் தலையிடமுடியும் எனவும் கருணாநிதி கூறி இருக்கிறார். 

தவிரவும்; அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானங்கள் படி தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்தாம் பதவி விலகமுன்வந்தார்கள் என்றும், எப்படியாயினும் சரி இலங்கையில் போர் நிறுத்தப்படவேண்டும் என்பதுதான் அனைத்து தமிழர்களின் விருப்பம் என்றும், ஆனால் அதை எவ்வாறு நடைமுறைப்படுத்துவதில்தான் வேறுபாடுகள் என்றும் கருணாநிதி மேலும் தனது கடிதத்தில் கூறியிருக்கிறார்.

இதனிடையே அ இ அ தி மு க பொதுச்செயலாளர் ஜெயலலிதா இலங்கைத்தமிழர்களுக்கு என திரட்டப்படும் நிதி மற்றும் பொருட்கள் விடுதலைப்புலிகளைச் சென்றடைந்துவிடுமோ என்ற ஐயம் தமிழ்நாட்டு மக்களுக்கு இருப்பதாகக் கூறி இருக்கிறார்.

தவிரவும் அரசு ஊழியர்கள் ஊதியத்திலிருந்து ஒரு நாள் சம்பளம் கட்டாயமாக பிடிக்கப்பட்டு இலங்கைத்தமிழர்க்கான நிதியில் சேர்க்கப்படுவதாக தகவல்கள் வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டி இருக்கிறார். ஆனால் இங்கு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் அவர் நிதி திரட்டப்படக்கூடாது என்றோ அல்லது எவ்வாறு விடுதலைப்புலிகளுக்கு அவ்வுதவி திருப்பிவிடாமல் பார்த்துக்கொள்வது என்பது பற்றியோ எதையும் கூறவில்லை என்று சுட்டிக்காட்டுகின்றனர் நோக்கர்கள்.

 

 

Exit mobile version