25.02.2009.
இலங்கையில் பல்வேறு இன்னல்களை தொடர்ச்சியாக அனுபவித்து வருகின்ற இந்தியவம்சாவளி மக்கள் உட்பட அனைத்து தமிழ் மக்களையும் காப்பாற்ற இந்தியா முன்வருமென்று எதிர்பார்ப்பது உண்மைக்கு புறம்பான ஒரு நம்பிக்கையாகும் என்று இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் முன்னாள் மத்திய மாகாணசபை பிரதித்தலைவருமான இரா.தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இலங்கையில் குடியேறிய இலட்சக்கணக்கான இந்திய வம்சாவளி மக்கள் வாக்குரிமை, குடியுரிமை, நீக்கப்பட்ட நிலையில் சுமார் 40 ஆண்டுகளுக்குமேல் அரசியல் அநாதைகளாக அவதியுற்றபோதிலும் இந்திய வழித்தோன்றல்களின் கல்வி பொருளாதாரம், அரச துறையில் பதவி அனைத்துமே மறுக்கப்பட்ட நிலையில் வெறும் நடைபிணங்களாக நடமாடிய போதிலும் அவர்களின் அவல நிலையைப் போக்குவதற்கு இந்தியா ஒரு போதும் உதவவில்லை.
1939 ஆம் ஆண்டு ஆசிய ஜோதி பண்டிட் ஜவகர்லால் நேருவின் முயற்சியில் இலங்கை இந்தியன் காங்கிரஸ் அதாவது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது.
இந்த மாபெரும் ஸ்தாபனத்தின் மூலம் வலுவற்றவர்கள் என்று வர்ணிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் தமது அரசியல் பொருளாதார கல்வி மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தது மாத்திரமின்றி ஆட்சியாளர்களுக்கே பெரும் சவாலாக செயல்பட்டார்கள்.
1960 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வடக்கில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாகிரகப் போராட்டத்திற்கு ஆதரவு நல்கும் வகையில் நடத்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அடையாளவேலை நிறுத்தம் ஒரு முன்னுதாரணமாகும்.
மலையக மக்களின் இந்த நடவடிக்கையைக் கண்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் தலைமையில் இயங்கிய அன்றைய ஆட்சியாளர்கள் ஆடிப்போனார்கள்.
அவர்களின் பீதியைப் போக்குகின்ற வகையிலே பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி தலைமையில் இயங்கிய இந்தியபேரரசு இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினரின் ஏகப் பிரதிநிதியாக இருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்களிடம் கலந்தாலோசிக்காமல் எதேச்சதிகாரம் முறையில் மூன்றரை இலட்சம் இந்திய வம்சாவளியினரை நாடு கடத்தும் துரோக ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு வரலாறு காணாத வகையில் இலங்கை வாழ் இந்திய தோட்டத் தொழிலாளரின் இருப்பை பலவீனமடையச்செய்தது.
இந்த துரோக ஒப்பந்தத்தை கிழித்தெறிய வேண்டுமென போர்க்கொடி எழுப்பிய இ.தொ.கா.வை சமாதானப்படுத்தும் வகையில் இந்திய நலனை பாதுகாப்பதற்காகவே அன்றைய இந்திய பாகிஸ்தான் முறுகல் நிலையில் தாம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு எழுதிய கடிதத்தில் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
இதிலிருந்து இந்திய பேரரசு இங்கு வாழ்கின்ற இந்திய வம்சாவளி மக்கள் உள்ளிட்ட தமிழ் மக்களின் நலனைவிட தமது சொந்த நலனையே குறிப்பாக இந்திய பாதுகாப்பையே முக்கியமாக கருதுகிறது என்பதும் இதற்காக என்ன விலை கொடுப்பதற்கும் தயங்காது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தமது சுய நலப்போக்கை மாற்றி இந்தியாவின் ஈடு இணையற்ற தலைவர்கள் மகாத்மா காந்தி, பண்டிட் ஜவஹர்லால் நேரு, அன்னை இந்திரா காந்தி ஆகியோர்களைப்போன்று இலங்கை வாழ்தமிழ் மக்களின் மீது உண்மையாக உணர்வுபூர்வமாக சிந்தித்து செயற்பட வேண்டும்.