Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு என்ற பெயரில் வன்முறை : தமிழ்நாடு காங்ரஸ் தலைவர்

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை காங்கிரஸ் கட்சி இனியும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது என்று அதன் மாநில தலைவர் கே.வீ.தங்கபாலு எச்சரித்துள்ளார். காங்கிரஸ் தொண்டர்கள் வீதிக்கு வந்து போராடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
.
இலங்கை ராணுவம் முல்லைத் தீவை பிடித்ததை தொடர்ந்து ஏராளமான தமிழர்கள் அங்கு சிக்கி உள்ளார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரி வருகின்றன.

இப்பிரச்சனையில் காங்கிரஸ் அணுகுமுறை கடும் விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் தாக்குதலுக்கு ஆளானது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலுவுக்கு மிரட்டல் வந்தது.

காங்கிரஸ் எம்.பி.க்கள் சுதர்சன நாச்சியப்பன், கார்வேந்தன் ஆகி யோருடைய வீடுகள் தாக்கப்பட்டன. சட்டமன்ற உறுப்பினர்கள் ஞான சேகரன், அசன்அலி ஆகியோருக்கு மிரட்டல் வந்தது. அத்துடன் வேலூரில் காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரனின் அலுவலகம் தாக்கப்பட்டது.

மதுரையில் சுதர்சன நாச்சியப்பன் அலுவலகம் தாக்கப்பட்டதை கண்டித்து நீதிமன்ற வளாகத்தின் எதிரே காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றபோது வழக்கறிஞர்கள் சிலர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் காங்கிரஸ் கொடியை எரித்தனர்.

நேற்று சென்னை உயர்நீதிமன்றத் திற்கு எதிரே காங்கிரஸ் கட்சியின் கொடி எரிக்கப்பட்டது. வேலூர் எம்எல்ஏ ஞானசேகரனுக்கு மீண்டும் நேற்று மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அவருடைய அலுவலகம் தாக்கப்பட்டது ஒரு ஒத்திகைதான் என்றும், அவருடைய வீடு சூறை யாடப்படும் என்றும் அந்த மிரட்டல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இப்படி அடுக்கடுக்காக காங்கிரசார் மீது தாக்குதல் மற்றும் மிரட்டல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலு மிக காட்டமான அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு என்ற பெயரில் சென்னை உயர்நீதி மன்றம் முன்பு சில சமூகவிரோதிகள் சோனியா காந்தி திருவுருவப் படத்தையும், காங்கிரஸ் கொடி யையும் தீவைத்து கொளுத்தியுள்ளனர்.
கடுமையான கண்டனத்திற்கும், தண்டனைக்கும் உரிய அக் குற்றத்தை புரிந்த சமூகவிரோதிகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் அந்நாட்டு ராணுவத் திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடக்கும் போரால் அப்பாவி தமிழர்கள் அல்லல்பட கூடாது. அவர்கள் காப்பற்றப்பட வேண்டும் என்று பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் 2 முறை இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் பேசினார்.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட வேண்டும். அங்கு அப்பாவி மக்கள் பாதிக்கப்படக் கூடாது. எனவே அங்கு இருசாராரும் போரை நிறுத்த வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் தமிழர்கள் வாழ்வுரிமைப் பெற அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.

இதற்குப் பிறகாவது மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு துணை நிற்பதற்கு பதிலாக தமிழின துரோகிகள் சிலர் சோனியா காந்தி திருவுருவப் படத்தையும், காங்கிரஸ் கொடியையும் எரிப்பது, காங்கிரஸ் அலுவலகங்கள் மற்றும் காங்கிரஸ் செயல்வீரர்களையும் தாக்குவது போன்ற வன்முறை செயல்களில் அங்கும், இங்கும் ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் என்றைக்கும் சட்டத்தை மதித்துப் போற்றுகிற பேரியக்கம். என்றாலும் எங்களது பொறுமையை மேலும் மேலும் சோதிக்க வேண்டாம். இனியும் தொடர்ந்து அந்த வன்முறை சம்பவங்கள் தொடருமேயானால் தமிழக அரசு அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்குமே யானால் காங்கிரஸ் சகோதர, சகோதரிகள் வீதிக்கு வந்துபோராடும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

எனவே இனியாவது வன்முறைச் செயலை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்தி சட்டம், ஒழுங்கை காத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Exit mobile version