01.11.2008.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுசெயலாளர் பிரகாஷ் கராத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வேண்டும், தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு தன்னாட்சி வேண்டும், பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினாலும் விடுதலைப்புலிகளை எக்காரணங்கொண்டும் ஆதரிக்க முடியாது என்று கூறினார்.
இதனிடையே,போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரைப்பட நடிகர்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.
ஏறத்தாழ அனைத்து முன்னணி நடிகர்கள், நடிகர்கள் அனைவருமே இதில் கலந்துகொண்டனர் எனலாம். உண்ணாவிரதம் நடிகர் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது.
கூட்ட முடிவில் போர் நிறுத்தம் கோரி தீர்மானம் இயற்றப்பட்டது. நிதி உதவி வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசியவர்கள் இலங்கை அரசை கடுமையாக தாக்குவதை ஓரளவு தவிர்த்தாலும் கூட மத்திய அரசு பிரச்சினையில் தலையிடவேண்டுமென்று வற்புறுத்தினர்.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் போன்றோரும் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர்.
இந்தப் போராட்டத்தைப் பார்வையிட்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சிவாஜிலிங்கம், மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டோரை நேரில் சந்தித்து தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.