Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

“இலங்கைக்கு கடன் வழங்கிய விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்கவில்லை”.

ஐ.நா.: சர்வதேச நாணய நிதியம் தனது வெளிப்படைத் தன்மை குறித்து பேசும் போது, இலங்கையானது நாணய நிதியத்திடம் கடன்பெறும் நோக்கத்திற்கான இணக்கக் கடிதத்தை வெளியிட்டமை பற்றி பெருமையாகப் பேசுவதாகவும் அதேசமயம், 2.6 பில்லியன் டொலரை கடனாகப் பெற்றுக் கொள்வது தொடர்பான நுட்ப ரீதியான புரிந்துணர்வு குறிப்பை கொழும்பு வெளியிடாமல் வைத்திருப்பதாகவும் நியூயோர்க்கிலுள்ள இன்னர் சிற்றி பிரஸ் குறிப்பிட்டுள்ளது.அதேசமயம், வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, ஆர்ஜன்ரீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கலந்துகொண்டிராததை சர்வதேச நாணய நிதியம் உறுதிப்படுத்தக் கூட இல்லை என்று நேற்று முன்தினம் திங்கட்கிழமை இன்னர் சிற்றி பிரஸின் ரஸல் மத்தியூ லி தனது செய்தி ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெள்ளிக்கிழமை இலங்கைக்கு 2.6 பில்லியன் டொலர் கடன் வழங்குவது தொடர்பாக இடம்பெற்ற வாக்களிப்பிற்கு எந்த நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தன அல்லது சமூகமளிக்காதிருந்தன என்பது தொடர்பாகவும் அல்லது இந்த மாதிரியான அளவுடைய கடன் தொடர்பாக பகிரங்கமாகத் தகவலை வெளியிடவில்லை என்றும் நாணய நிதியப் பேச்சாளர் வில்லியம் மூரேயிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியிருந்தது.

நாணய நிதிய நிறைவேற்றுச் சபையின் வாக்கெடுப்பு விடயத்தில் விசேடமான வாக்குகள் தொடர்பாக உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்துவது தவிர்க்கப்படுவது அவர்களின் கொள்கை என்று மூரே பதிலளித்துள்ளார். இது எந்த வகையான வெளிப்படைத்தன்மை என்று இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

சர்வதேச நாணய நிதியக் கடன் தொடர்பாக மாநாட்டு மண்டபத்தில் எவ்வாறு நிருபர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது என்றும் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியிருந்தது. அது கொழும்பு நிருபர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட செய்தியாளர் மாநாடு என்று மூரே பதிலளித்திருக்கிறார்.

இலங்கைக்கான கடன் தொடர்பான வாக்கெடுப்பில் பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, ஆர்ஜன்ரீனா, அமெரிக்கா கலந்துகொள்ளவில்லை. ஆனால், இதனை உறுதிப்படுத்தச் சர்வதேச நாணய நிதியம் மறுத்துள்ளது. மால்வினாஸ்/போர்லாந்து தீவுகள் சர்ச்சையின் போது ஆர்ஜன்ரீனாவுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொடர்பாக நால்வர் கொண்ட குழு எதிர்த்தது. ஓமான், பெலிஸ், இலங்கை என்பன பிரிட்டனுக்கு ஆதரவாகச் செயற்பட்டன. இதன் முரண்பட்ட தன்மை குறித்து இன்னர் சிற்றி பிரஸுக்கு சில வட்டாரங்கள் கூறியுள்ளன.

சர்வதேச நாணய நிதியத் தலைவர் பிரயன் அய்ட்கென்ஸுடனான ஊடக சந்திப்பின் போது கொழும்பிலுள்ள நிருபர்கள் மட்டுப்படுத்தப்பட்டதாக ஜூலை 27 இல் மூரே இன்னர் சிற்றி பிரஸுக்கு கூறியுள்ளார். ஆனால், இலங்கையில் பத்திரிகையாளருக்கான ஜனநாயகம் தொடர்பாக வெளியான அறிக்கையில் தற்போதைய ஆட்சியில் 34 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் அதேசமயம், பத்திரிகையாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், நெருக்குதல்கள் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையால் 50 இற்கும் அதிகமான பத்திரிகையாளர்கள் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர். ஆஸ்திரியாவில் 1, அவுஸ்திரேலியாவில்3, கனடாவில் 3, டென்மார்க்கில்1, பிரான்ஸில்12, ஜேர்மனியில்4, இந்தியாவில்5, மலேசியாவில்1, நெதர்லாந்தில்2, நேபாளத்தில்2, நோர்வேயில்2, சுவிஸில்16, பிரிட்டனில் 10, அமெரிக்காவில்2 பத்திரிகையாளர்கள் சென்றுள்ளனர்.

 

 

 
Exit mobile version