முளைவிடக்கூடிய மக்கள் போராட்டத்தை அழிப்பதற்காக இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் பல்வேறு உக்திகள் கையாளப்படுகின்றன. அதன் மிகப் பிராதான ஆயுதம் ஐக்கிய நாடுகள் சபை. தாம் இலங்கையில் ராஜபக்ச அரசைத் தண்டிக்கப் போவதாகவும் அதனால் மக்களைப் போராட வேண்டாம் என்றும் கடந்த ஐந்து வருடங்களாகக் கூறிவருகிறது. இந்த இடைவெளிக்குள் உலகம் முழுவதும் அகதிகளை விரட்டியடித்து அழித்துக்கொண்டிருக்கிறது. கைது செய்யப்பட்ட போராளிகள் சாகடிக்கப்படுகின்றனர். நிலம் பறிக்கப்படுகின்றது. பண்பாட்டு ஆக்கிரமிப்புத் தொடர்கின்றது. வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்ப்பேசும் மக்கள் சிறுபான்மையாகும் நிலை தோன்றியுள்ளது.
இனச்சுத்திகரிப்பைத் தொடர்வதற்காகவும் பல்தேசியப் பெரு நிறுவனங்கள் இலங்கை முழுமையையும் சூறையாடும் சூழலை ஏற்படுத்துவதற்காகவும் மட்டுமே ஐ.நா தீர்மானம் நிறைவேற்றுவதாகவும் தண்டிக்கப்போவதாகவும் பூச்சாண்டி காட்டிவருகின்றது. இன்னும் சில ஆண்டுகளில் வடக்கும் கிழக்கும் தமிழர்கள் சிறுப்பான்மையாக வாழும் பிரதேசமாகவும் இலங்கையில் பல பகுதிகள் பல்தேசியக் கம்பனிகளின் தரிப்பிடமாகவும் மாறிவிடும்.
ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளையின் சர்வதேச விசாரணை குழுவுக்கு ஆதரவளிக்க முடியாது என்று நாடாளுமன்றத்தில் தீர்மானிக்கப்படும் என அரசாங்கமும் அதனால் அழிவுகள் ஏற்படும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒரு புதிய நாடகத்தை ஆரம்பித்துள்ளன. இந்த நாடகத்தின் பின்னணியில் தான் அழிவுகளே நடைபெறுகின்றன என்பதை மக்களுக்குச் சொல்கின்ற தலைமை உருவாகும் போது மட்டுமே அழிவுகள் மட்டுப்படுத்தப்படும்.
ஆக, ஐ.நா உம் இனக்கொலை அரசும் கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் நாடகத்தை நம்பியிராது, புதிய மக்கள் சார்ந்த தலைமையை உருவாக்கிக் கொள்வதன் ஊடாகவே அழிவுகளை மட்டுப்படுத்த முடியும்.